மகளிர் திட்டத்தின்கீழ் 2,274 பயனாளிகளுக்கு ரூ.17.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: திருக்கழுக்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்

திருக்கழுக்குன்றத்தில் மகளிர் திட்டத்தின்கீழ் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருக்கழுக்குன்றத்தில் மகளிர் திட்டத்தின்கீழ் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Updated on
1 min read

திருக்கழுக்குன்றத்தில் மகளிர் திட்டத்தின்கீழ் வீட்டுமனை பட்டா உட்பட ரூ.17.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,274 பயனாளிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே மகளிர் திட்டத்தின் கீழ் அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் மற்றும் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகள் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

மேலும், 70 பயனாளிகளுக்கு ரூ.17.50 லட்சம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனம், 5 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.77.30 லட்சம் கடனுதவிகள் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 455 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1.74 கோடி மற்றும் ரூ.1.74 கோடி மதிப்பில் தங்கம் ,1,744 பயனாளிகளுக்கு ரூ.12.22 கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டா என மொத்தம் ரூ.17.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கோட்டாட்சியர் செல்வம், சமூகநலத் துறை அலுவலர் சங்கீதா, அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல், மகளிர் அணி செயலாளர் மரகதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக முதல்வர் பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் மூலம், அரசு மற்றும் தனியார்துறையைச் சேர்த்து ஆண்டுக்கு 1.25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை நாங்கள் கூறவில்லை. சிஎம்ஐ தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், பெண் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக அரசு மூலம் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களால் தொட்டில் குழந்தை திட்டமே தேவையற்றது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in