

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருவள்ளூர் நாடாளுமனறத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:
திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ரவிக்குமார் கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இத்தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தல். மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான கூட்டணி இது. வாஜ்பாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் தலைமையிலான அரசிலும், கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார்.
இத்தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க கூட்டணிக் கட்சியினர் பாடுபட வேண்டும். இத்தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்சாரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான பாலசிங்கம், நீலவானத்து நிலவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.