

இந்தியா-பாகிஸ்தான் போர் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்கரையில் சூர்ய கிரண் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி, இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. இது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ராணுவ வீரர்கள் மிகப்பெரிய அளவில் சரணடைந்தது இந்தப் போரில்தான் நடந்தது.
இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-வது பொன்விழா வெற்றி ஆண்டு, நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 16-ம் தேதி முதல் ஒராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ராமேசுவரம் அருகே உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமானத்தளம் சார்பாக சூர்ய கிரண் போர் விமானங்களின் சாகசங்கள் செய்து காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை பாம்பன் கடற்கரையில் சூர்ய கிரண் போர் விமானங்கள் வானில் பறந்து புகையைக் கக்கியபடி சாகசங்கள் செய்து காட்டின. 10 சூர்ய கிரண் போர் விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. இந்த சாகசக் காட்சிகளை பாம்பன் கடலோரப் பகுதி யில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர்.