கும்பகோணத்தில் 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா தொடக்கம்: பெருமாள் கோயில்களில் இன்று கொடியேற்றம்

கும்பகோணத்தில் 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா தொடக்கம்: பெருமாள் கோயில்களில் இன்று கொடியேற்றம்
Updated on
1 min read

கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாசி மக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

முன்னதாக, கோயில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, அனைத்து சுவாமி- அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருளினர். அப்போது, வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நேற்றிரவு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன், இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் சிறப்பம்சமாக பிப்.20-ம் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலிருந்து 63 நாயன்மார்கள் வீதியுலா, பிப்.21-ம் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, பிப்.23-ம் தேதி வெண்ணைத்தாழி அலங்காரம், 24-ம் தேதி காலை தேரோட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. பிப்.25-ம் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.26-ம் தேதி மகாமக குளத்தில் மதியம் 12.30 மணிக்கு மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது.

அப்போது, குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில், 12 சிவன் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவாக புறப்பட்டு, மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர்.

பெருமாள் கோயில்களில் இன்று...

கும்பகோணம் ஆதிவராக பெருமாள், சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி கோயில்களில் மாசிமக பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று(பிப்.18) காலை விழா கொடியேற்றப்படுகிறது. பிப்.21-ம் தேதி கருட வாகனங்களில் ஓலைச்சப்பரம், பிப்.26-ம் தேதி மாசிமகத்தன்று காலையில் சக்கரபாணி கோயில் தேரோட்டம், அதே நாளில் சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். அந்தந்த கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in