திமுக ஆட்சியில் மதுரை கப்பலூர் டோல்கேட் பிரச்சினைக்கு தீர்வு: ஸ்டாலின் உறுதி
"திமுக ஆட்சியில் மதுரை கப்பலூர் டோல்கேட் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடந்தது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினிடம், மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதி குறைகளைத் தெரிவித்தனர்.
அப்போது, திருமங்கலத்தைச் சேர்ந்த வாசு பேசுகையில், ‘‘19 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றி வருகிறேன். திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா சுற்றவட்டாரப் பகுதிகளில் நான்கு வழிச்சாலைகளில், மற்றப் பகுதிகளில் எத்தனையோ விபத்துகள் தினமும் நடக்கிறது.
நாங்கள் அவர்கள் உயிர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ்சில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், உயிருக்குப் போராடுகிறவர்களை அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கூட போக முடியவில்லை.
சட்டத்தை மீறி திருமங்கலம் நகராட்சிக்குள் டோல்கேட் அமைத்துள்ளனர். விபத்துகள், ஆபத்துகள் நடக்கிறது. இந்த டோல்கேட்டால் விபத்துகளில் காயமடைந்தவர்களை விரைவாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த டோல்கேட்டை அகற்ற எத்தனையோ ஆட்சியாளர்களிடம் முறையிட்டுள்ளோம். அது நடக்கவில்லை,’’ என்றார்.
அதற்கு ஸ்டாலின், ‘‘உயிர் போகக்கூடிய பிரச்சினையான டோல்கேட்களை அகற்ற திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றார்.
மதுரை கிழக்கு ஒன்றியப்பகுதியை சேர்ந்த மரகதவள்ளி பேசுகையில், ‘‘இட்லி கடை நடத்தி வருகிறேன். 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து 3 ஆண்டுகளாகிவிட்டது. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். விதவைகளுக்கான உதவித்தொகை வழங்க பலமுறை விண்ணப்பித்துள்ளேன். ஆனால், கிடைக்கவில்லை, ’’ என்றார்.
ஸ்டாலின், ‘‘கணவரை இழந்தாலும் இட்லி கடை வைத்து கவுரவமாக வாழுகிறார்கள். உங்கள் மன உறுதிக்கு என்னுடைய பாராட்டுள்கள். ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கான விதவைகள் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், ’’ என்றார்.
சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் பேசுகையில், ‘‘தேனூர் கிராமத்தை சேர்ந்தவன். புறநானூற்றில் இடம்பெற்ற எங்கள் கிராமத்தில் மது, புகையில்லை பழக்கம் கூடாது, அதை அனுமதிக்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறோம். அப்பேற்ப்பட்ட எங்கள் கிராமத்தில் மருத்துவமனை இல்லை. ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை. மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இல்லை, ’’ என்றார்.
ஸ்டாலின், ‘‘2 கி.மீ.,க்கு மினி கிளினிக் அமைத்த முதலமைச்சருக்கு நன்றி என்று அதிமுகவினர் போஸ்டர் ஓட்டுகின்றனர். அப்படியிருக்கையில் அஜித்குமார் இங்கு வந்திருக்க மாட்டார்கள். இந்த கோரிக்கையை வைத்திருக்க மாட்டார்கள். இருக்கிற ஆரம்ப சுகாதாரநிலையங்களை முறையாக செயல்படுத்தினாலே மக்கள் மருத்துவவசதி பெறுவார்கள். வாழைப்பழம் காமெடி போல் பழைய கட்டிடங்களை பெயிண்ட்டிங் அடித்து அதுதான் மினி கிளினிக் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள், ’’ என்றார்.
‘மனுவுக்கு தீர்வு காணாவிட்டால் கோட்டைக்கே நேரடியாக வரலாம்’
ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் இதுவரை இந்த நிகழ்ச்சியில் 110 சட்டமன்ற தொகுதிகளை முடித்துள்ளேன். இன்று 4ம் கட்டமாக மதுரையில் தொடங்கியுள்ளேன். விரைவில் 234 தொகுதிகளில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மதுரையில் தொடங்கியுள்ள இந்த சுற்றுப்பயணம் தொடர்ந்து 6 நாட்கள் மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வந்தவர்கள் உங்கள் பகுதி குறைகளைத் தெரிவித்து மனு கொடுத்து பதிவு செய்து இருப்பீர்கள்.
அதற்கு அடையாள ஒப்புதல் சீட்டாக அடையாள அட்டை கொடுத்து இருப்பார்கள். ஆட்சிக்கு திமுகதான் வரப்போகிறது. முதல் 100 நாளில் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எழுதிக் கொடுத்த பிரச்சனைகளை முடிக்கப்போவதாக நான் சபதம் போட்டுள்ளேன்.
அந்த 100 நாளில் யாருக்கு அவர்கள் எழுதிக் கொடுத்தப் பிரச்சினை தீர்ப்படவில்லையோ, அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கிய அடையாள அட்டையை எடுத்தக் கொண்டு எந்த அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வரலாம், ’’ என்றார்.
