நாட்டின் சக்கரவர்த்தி என மோடி நினைக்கிறார்; பிரதமராகச் செயல்படவில்லை: ராகுல் காந்தி விமர்சனம்

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்.
Updated on
2 min read

நாட்டின் சக்கரவர்த்தி என மோடி நினைக்கிறார். அவர் பிரதமராகச் செயல்படவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏஎப்டி மில் திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (பிப்.17) மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. பேசியதாவது:

"பல நாடுகளில் ஒரே மதம், ஒரே மொழி, கலாச்சாரம் உள்ளது. இந்தியாவின் வலிமை அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதில் உள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இந்தியாவின் பெரிய மாநிலத்துக்கு இணையான முக்கியத்துவம் உண்டு. அதற்கு ஒரு காரணம் உள்ளது. காங்கிரஸ் உங்கள் கலாச்சாரம், பண்பாடு, உரிமைகளைப் பாதுகாக்கும். புதுச்சேரி மக்களை நாங்கள் மனமார நேசிக்கிறோம். புதுச்சேரி இந்தியாவில் உள்ளது என்றால் இந்தியாவும் புதுச்சேரியில் உள்ளது. இது ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதையால் அமைகிறது. புதுச்சேரி ஒருவருக்கு தனிப்பட்ட சொத்து அல்ல. புதுச்சேரி எனது சொந்த சொத்து என நினைப்போர் விரைவில் ஏமாந்துபோவார்கள்.

புதுச்சேரி சிறிய பகுதி, அதிக மக்கள் இல்லை என நினைத்தால், இந்திய மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என அர்த்தம். கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி புதுச்சேரி அரசைச் செயல்பட விடவில்லை. வாக்களித்த மக்களைத் தனிப்பட்ட முறையில் பிரதமர் அவமதித்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்கையும் மதிக்க மாட்டேன் எனக் கூறினார்.

மோடியைப் பொறுத்தவரை அவர் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். உங்கள் கனவு, ஆசைகள், கடின உழைப்பைக் கருத்தில் கொள்ளவில்லை.

நாட்டின் சக்கரவர்த்தி என மோடி நினைக்கிறார். பிரதமராகச் செயல்படவில்லை. அவர் புதுச்சேரி மக்கள் எண்ணத்தை மதிக்க வேண்டும். நிதி ஆதாரத்தைத் தர வேண்டும். எதுவும் மோடி தரவில்லை. கடந்த முறை நீங்கள் வாக்களித்ததை அவமதித்த பிரதமரைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

உங்கள் கடந்த காலத்தை அவமதித்தவர், நிச்சயமாக எதிர்காலத்தையும் அவமதிப்பார். எங்களுக்குத் தரும் வாக்கானது உங்கள் கனவுகளை, எண்ணங்களைச் செயல்திட்டமாக உருவாக்கித் தரும். இதைத் தேர்தல் போட்டியாக நினைக்கவில்லை. இது புதுச்சேரியின் ஆன்மாவுக்கு நடத்தப்படும் தர்மயுத்தம். இந்த யுத்தம் நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்களோ, அப்படி வாழ விரும்பும் உரிமையைப் பெற்றுத் தர நடத்தப்படும் யுத்தம்.

புதுச்சேரிக்கு என்ன அநீதி செய்கிறார்களோ அதையே இந்தியாவுக்கும் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கின்றனர். பஞ்சாப்பில் தீவிரவாதிகள் என்கின்றனர். அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர்.

3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளைச் சித்ரவதை செய்கிறார்கள். 3 சட்டங்களின் நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தைப் பறித்து சில பணக்காரர்களிடம் கொடுப்பதேயாகும். இந்தச் சட்டம் வரும்போது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனத்தினர் தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஏழை மக்கள் உணவுக்கு, உணவுப்பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்.

உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்த ஆளுநர் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடாது.

புதுச்சேரி மக்கள் எதிர்காலத்தை மக்களால் தேர்வாகும் பிரதிநிதிகள்தான்தான் முடிவு செய்ய வேண்டும். புதுவையின் எதிர்காலத்தைக் கெடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். புதுச்சேரி கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பாதுகாக்க நான் போராடுவது எனக்குப் பெருமை. இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தைக் களவு செய்ய அனுமதிக்க மாட்டோம்".

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in