

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 13-வது வார்டில் ஆதரவற்றோர் சிகிச்சைப் பிரிவு இன்று தொடங்கப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் கே.வனிதா முன்னிலையில், இந்த புதிய சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோர் இன்று (பிப். 17) திறந்துவைத்தனர்.
இது குறித்து, மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
"திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் ஆதரவற்றோர் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைக்கு வருவோருக்கு பிற நோயாளிகளுடனேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நேரிட்டதால், 20 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிகிச்சை பெறும் ஆதரவற்றோருக்கு பிரத்யேக சிகிச்சை, கூடுதல் கண்காணிப்பு, கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சை முடியும் ஆதவற்றவர்களை காவல் துறை உதவியுடன், சட்டப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கவும், உறவினர் அல்லாதவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க இந்த பிரத்யேக சிகிச்சைப் பிரிவு உதவியாக இருக்கும்.
சிகிச்சைக்குச் சேர்க்கப்படும் ஆதரவற்றோரில் அதிகம் பேர் முதியவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு நோய் மற்றும் எலும்பு பாதிப்புடன் உள்ளனர். எனவே, தற்போது இந்தச் சிகிச்சைப் பிரிவுக்கென தலா ஒரு பொது மருத்துவர், எலும்பு மருத்துவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஷிப்டுகளிலும் பணியாற்ற செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.