Last Updated : 17 Feb, 2021 04:54 PM

 

Published : 17 Feb 2021 04:54 PM
Last Updated : 17 Feb 2021 04:54 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி பேச்சு

படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். காலை 11.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் பஜாரில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசினார்.

தொடர்ந்து திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிர் குழுவினர் கலந்துரையாடல் கூட்டத்திலும், தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்ற அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டங்களில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மழை வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

அதுபோல விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதையும் செய்துள்ளோம்.

ஆனால், இதனை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார். விவசாயி என்றாலே அவருக்கு கோபம் வருகிறது. என்னுடைய தொழில் விவசாயம். அதனால் நான் விவசாயி என்று கூறுகிறேன்.

அவருக்கு எந்தத் தொழிலும் கிடையாது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும். நாட்டின் உணவுப் பஞ்சத்தை போக்கக்கூடிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கக்கூடிய அரசு அதிமுக அரசு.

இந்தியாவிலேயே முதல் முறையாக பூத் கமிட்டிகளில் மகளிருக்கு தனி அமைப்பை ஏற்படுத்தியது அதிமுக தான். மகளிர் நலன்களை காக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 99 ஆயிரம் பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்துள்ளேன். மேலும் 1 லட்சம் பேருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவினருக்கு நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக ரூ.82 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மட்டும் ரூ.12,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 68574 குழுக்களுக்கு ரூ.1969.54 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக தலைவர் ஸ்டாலின் தான் செல்லுமிடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டே செல்கிறார். அந்தப் பெட்டியில் பணம் போடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் யாரும் பணம் போடவில்லை. துண்டு சீட்டு தான் போடுகின்றனர். ஏனென்றால் இவர்களுக்கு பெட்டி வாங்கி பழக்கம். பழக்கதோஷம் போகவில்லை.

மக்கள் குறைகளை மனுவாக அந்த பெட்டியில் போட்டால், அவர் முதல்வரானதும் 100 நாட்களில் குறைகளை தீர்த்து வைப்பாராம். இத்தனை காலம் எங்கே போனார்கள். திமுக ஆட்சியில் இருந்த போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்த போது ஏன் செய்யவில்லை. அப்போது ஏன் அவர் நாட்டு மக்களை பார்க்கவில்லை. நாட்டு மக்களை பார்க்காதவர்கள் தான் திமுகவும், திமுக கட்சி தலைவரும். அவர்கள் நாட்டு மக்களை மறந்ததால், மக்கள் திமுகவை மறந்து விட்டனர்.

நாங்கள் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வதால் தான் ஸ்டாலின் வெளியே வருகிறார். இல்லையென்றால் அவர் வரமாட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்களை சந்தித்து இருந்ததால், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். அதிமுக மக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்ததால் தான் அவர்கள் வீதிக்கு வந்து மனுக்களை பெறுகின்றனர்.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சட்டப்பேரவையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை அறிவித்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்று அதனை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, அதனை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் முழுவதும் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு என்ன காரணத்தினால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கடிதம் மூலமாக கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம். அதனால் மக்களை ஏமாற்றி திமுக ஆடும் நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.

மேலும், இதனையும் எளிமையாக்கி மக்கள் வீட்டில் இருந்தபடி செல்போன் மூலமாக தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கடந்தாண்டு செப்டம்பர் மாதமே சட்டப்பேரவையில் அறிவித்து விட்டேன். முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை அறிவித்து உதவிக்கு 1100 என்ற எண்ணையும் வழங்கி உள்ளேன். இந்த திட்டத்தை 2 நாளைக்கு முன்பு தொடங்கி வைத்துள்ளேன்.

இந்த எண்ணில் வீட்டிலிருந்தபடியே அழைத்து குறைகளை தெரிவித்தால் உடனடியாக அரசு தீர்வு காணப்படும். இது விஞ்ஞான உலகம். பெட்டிஷன் எழுதி அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அதையும் எளிதாக்கியது அதிமுக அரசு. இனி மனு வாங்க வேண்டிய வேலை கூட திமுகவுக்கு இல்லை.

மக்கள் துன்பப்படும் போதெல்லாம் அதை களையும் அரசாக அதிமுக அரசு உள்ளது. இது ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. கிராமத்தில் உள்ள ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாய தொழிலாளர்கள் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருகிறோம். வீடு மற்றும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரும். அதிமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை போல இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் கிடையாது. கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அதிமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அதிமுக அரசு மக்களோடு ஒன்றி இருப்பதால் விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோரின் தேவை அறிந்து செயல்படுகிறோம். இதனால் மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். பொய்களை சொல்லி தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி காணலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது.

ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம், நாங்கள் இதை செய்தோம் என ஏதாவது கூறியது உண்டா. உங்கள் ஆட்சியில் ஏழை மக்களுக்காக என்னத் திட்டம் கொண்டு வந்தீர்கள். மக்களிடம் சென்று குறைகளை கேட்கிறார். ஆனால் இவர் என்ன மக்களுக்கு செய்தார் என்று சொல்வதில்லை. ஸ்டாலின் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்.

2006-ம் ஆண்டு தேர்தலில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். 2 ஏக்கர் நிலம் கொடுக்க முடியுமா. எங்கு நிலம் இருக்கிறது. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். நிலம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களிடத்தில் இருந்து திமுகவினர் நிலத்தை அபகரிக்காமல் இருந்தால் போதும். அதிலேயே மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

திமுக ஆட்சியின்போது மோசமாக இருந்த சட்டம்- ஒழுங்கு, அதிமுக ஆட்சியில் சிறப்பாக உள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாத போது திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா. திமுக மோசமான கட்சி. அராஜக கட்சி. தப்பித்தவறி கூட அவர் கையில் ஆட்சி வராது. அப்படி வந்து விட்டால் மக்கள் அமைதியாக வாழ முடியாது.

மக்களோடு மக்களாக இருந்து மக்களின் குறைகளை தெரிந்து அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து திட்டங்களைத் தீட்டி அந்தத் திட்டங்களின் மூலமாக மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறோம். எனவே அதிமுக ஆட்சி தொடர, அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் முதல்வர்.

கூட்டங்களில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், போ.சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x