Last Updated : 17 Feb, 2021 04:48 PM

 

Published : 17 Feb 2021 04:48 PM
Last Updated : 17 Feb 2021 04:48 PM

10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப் பாதை: பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் போராட்டம்

திருச்சி கொள்ளிடக் கரையில் தனியார் ஆக்கிரமிப்பால் பொதுப் பாதை காணாமல் போய்விட்டதாகக் கூறி, அதை மீட்க வலியுறுத்தி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் வாகன சோதனைச் சாவடி அருகே பூசக்கரை மண்டபம் எதிரேயிருந்த 23 அடி பொதுப் பாதை, சுமார் 300 மீட்டர் தொலைவுக்குத் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வலியுறுத்தி, பூசக்கரை மண்டபம் எதிரே பொதுமக்களுடன் இணைந்து இன்று (பிப்.17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், "ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமியும், திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மனும் குறிப்பிட்ட திருவிழா காலங்களில் பூசக்கரை மண்படம் வந்து இந்தப் பொதுப் பாதை வழியாக ஆற்றுக்குச் சென்று நீராடிச் செல்வது வழக்கம். அதேபோல், சுற்றுப்பகுதி மக்கள் தங்களது மாடுகளை இந்தப் பாதை வழியாகவே ஆற்றுக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பொதுப் பாதையைத் தனியார் சிலர் ஆக்கிரமித்து வேலி அடைத்துவிட்டனர். பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பலவிதப் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுப் பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வரை போராட்டம் நடத்த முடிவு செய்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர்.

தகவலறிந்து ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன், மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடாப்பிடியாக இருந்தனர்.

பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய இடத்தை உடனடியாக நில அளவை செய்து, மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆக்கிரமிப்புப் பகுதியில் புதர் மண்டிய இடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, நில அளவை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மக்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x