Last Updated : 17 Feb, 2021 04:26 PM

 

Published : 17 Feb 2021 04:26 PM
Last Updated : 17 Feb 2021 04:26 PM

குமரி ஈரநிலங்களில் பறவைகள் வரத்து 35 சதவீதம் குறைந்தது: வனத்துறை கணக்கெடுப்பில் அதிர்ச்சி

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இதில் முதல் நாளிலேயே கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் பறவைகள் வரத்து குறைந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஈரநிலங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பு பணி கன்னியாகுமரி வனக்கோட்ட பகுதிக்குட்பட்ட ஈரநிலங்களாக கண்டறியப்பட்டு பறவைகள் வசிப்பிடங்களான தேரூர் குளம், சுசீந்திரம் குளம், மாணிக்க புத்தேரி குளம், புத்தளம் உப்பளம், சுவாமித்தோப்பு, ராஜாக்கமங்கலம் காயல், தத்தையார்குளம் ஆகிய இடங்களில் இன்று தொடங்கியது.

குமரி மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன், பறவை ஆர்வலர்கள் டேவிட்சன், ராபர்ட் கிராப், ஹெர்பட் கிங்ஸ்லி ஆகியோர் அடங்கிய 7 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பில் அதிகாலையில் இருந்து ஈடுபட்டனர். கணக்கெடுப்பின் முதல் நாளிலேயே பறவை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு குமரி மாவட்ட ஈரநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் தென்பட்டன. ஆனால் இன்று மட்டும் 1500 பறவைகளுக்குள் மட்டுமே பார்க்க முடிந்தது. இது கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் பறவைகள் குறைவாகும்.

வெளிநாட்டு பறவைகள் மட்டுமின்றி உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளைய கணக்கெடுப்பில் இதே விகிதம், அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையிலான பறவைகளே இருக்க வாய்ப்பிரப்பதாக வனத்துறையினர் கருதுகின்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவை ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில்; வர்ணநாரை, கூழக்கிடா, செங்கால் உள்ளான், கரண்டிவாய் மூக்குநாரை, வெண்கொக்கு போன்ற பறவைகள் கணக்கெடுப்பின்போது தென்பட்டன. அதே நேரம் உள்நாட்டு பறவைகளிலே நாமத்தாரா, நீர்வாத்துகள், மஞ்சள்தாரா போன்றவற்றை காணமுடியவில்லை.

பூநாரைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு பூநாரை ரகங்களே இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது. வெளிநாட்டு பறவைகளில் உள்ளான், மண்வெட்டி தாரா, ஊசிவால் வாத்து போன்றவற்றை காணமுடியவில்லை.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் உள்ளநாட்டு, மற்றும் வெளிநாட்டு பறவைகள் குமரி மாவட்ட ஈரநிலங்களில் வாழ்விடங்களை அமைக்காமல் குறைந்துள்ளன. 35 சதவீதத்திற்கு மேல் பறவைகள் வரத்து குறைந்திருப்பது சுற்றுச்சூழலை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் வசிக்கும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து மாசடைவது, இதமான சூழல் இல்லாமை, குளங்கள் போன்ற பறவைகள் வசிக்கும் நீர்நிலைகளில் மனித தலையீடு அதிகரிப்பது, தட்பவெப்பம் மாற்றம் போன்றவை பறவைகள் வசிப்பிடங்கள் குறைவதற்கும், இனப்பெருக்கமில்லாமல் போவதற்கும் காரணமாக உள்ளது.

எனவே நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை போன்றவைற்றை அகற்றி நீந்தும் தன்மையுள்ள வாத்து போன்ற பறவைகள் அதிகரிக்கவும், நீர்நிலைகளை சுத்தமாக காத்து பறவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே ஈரநிலங்களில் பறவைகள் வரத்து அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x