

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாஜகவின் வாக்கு சதவீதத்தை பாதிக்காது என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை, அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் இன்று (பிப்.17) நடைபெற்றது.
பின்னர், நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, "தென்னிந்தியாவில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே பாஜகவில் நிறைய பேர் இணைந்துள்ளனர். இன்னும் நிறைய பேர் இணைவார்கள்.
இனி இந்தியாவில் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை. அதேபோல, குடும்பக் கட்சிகளுக்கும் எதிர்காலம் இல்லை. பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குடும்பக் கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்திலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 'குடும்ப பிரைவேட் லிமிடெட்' கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்" என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், "மேற்கு மண்டலம் பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. இங்கிருந்து அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமர்வார்கள். பிரதமரின் கோவை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களின் வாக்கு சதவீதத்தை பாதிக்காது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. கூடிய விரைவில் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பூரண மதுவிலக்கு என்பது பாஜகவின் அடிப்படைக் கொள்கை. பூரண மதுவிலக்கு வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை அரசின் பரீசிலனையில் இருக்கிறது" என்றார்.
நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.