

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை பதவியேற்கிறார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கி நேற்றிரவு (பிப்.16) குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுவை மாநிலத் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (பிப்.17) மாலை சென்னைக்கு வருகிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், கார் மூலம் புதுவைக்கு வருகிறார். நாளை (பிப்.18) காலை 9 மணிக்குப் புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழிசை பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"புதுவைக்கு ஆளுநராகச் சேவை செய்து வாழ்நாள் அனுபவம் கிடைக்க வழி செய்த மத்திய அரசுக்கு என் நன்றி. என்னோடு நெருங்கி உழைத்த அனைவருக்கும் நன்றி. மக்களின் எணணங்களுக்கு ஏற்ப ஆளுநர் மாளிகைக் குழு முழுத் திருப்தியான செயல்பாடுகளை அளித்துள்ளது என நம்புகிறேன்.
என்ன நடந்திருந்தாலும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு, சமூகப் பொறுப்பு, சட்ட விதிகளின்படி பணியாற்றியுள்ளேன். புதுவை மாநிலத்துக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இது புதுவை மக்களின் கையில் உள்ளது. புதுவை செழிப்படைய என் வாழ்த்துகள்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.