Last Updated : 17 Feb, 2021 02:51 PM

 

Published : 17 Feb 2021 02:51 PM
Last Updated : 17 Feb 2021 02:51 PM

அதிமுகவில் கருத்து வேறுபாடு என்பதே கிடையாது; மக்கள்தான் எங்கள் பலம்: அமைச்சர் என்.நடராஜன் பேட்டி

அதிமுகவில் கருத்து வேறுபாடு என்பதே கிடையாது, நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம் என, அமைச்சர் என்.நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொட்டப்பட்டு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (பிப்.17) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு, பூமி பூஜையைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் என்.நடராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தேர்தலில் போட்டியிட எப்போது விருப்ப மனு பெறுவீர்கள்? எந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பீர்கள்?

நல்ல நாள், நேரம், காலம் பார்த்து விருப்ப மனு பெறுவேன். யார் வேண்டுமானாலும் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினாலும் விண்ணப்பிக்கலாம். எவரெவர் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், அவைத் தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கூடி முடிவு செய்து அறிவிப்பார்கள். நான் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்துக்குட்பட்ட 2 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிப்பேன்.

'ஸ்லீப்பர் செல்' என்பது எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மட்டுமல்ல, சாதாரண தொண்டர்கள்தான். அவர்கள் தேர்தலில் அமமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளாரே?

நாட்டில் உள்ள இயக்கங்களிலேயே சிறந்தது அதிமுக. இந்தக் கட்சியில் மட்டும்தான் சாதாரண தொண்டன்கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். எனவே, அவர்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

மீண்டும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எதை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்வீர்கள்?

கடந்த 5 ஆண்டுகளில் நான் ஆற்றிய பணிகளை, முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தலைச் சந்திப்பேன்.

அதிமுக குறித்து மாற்றுக் கட்சியினர் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளனரே?

அதிமுக மீது மாற்றுக் கட்சியினர் வைக்கும் எவ்வித விமர்சனங்களுக்கும் கட்சித் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் சிறப்பான பதிலை அளிப்பார்கள்.

அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவே நேரடியாக களத்தில் நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

234 தொகுதிகளில் 184 தொகுதிகளில் வெற்றி பெற்ற சரித்திர சாதனை அதிமுகவுக்கு உள்ளது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே விளம்பரங்கள் அளிக்கிறார்களே?

அதிமுகவில் கருத்து வேறுபாடு என்பதே கிடையாது. அரசு விளம்பரங்களை முதல்வர் வழங்குகிறார். அதில், அனைவரும் இடம் பெறுகிறோம். ஆதாயம் தேடும் நோக்கில் புல்லுருவிகள் சிலர் வேண்டுமென்றே அதிமுகவில் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறுகின்றனர்.

பூமி பூஜையில் அமைச்சர் என்.நடராஜன் உள்ளிட்டோர்.

வி.கே.சசிகலாவுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறுவது தனிப்பட்ட கருத்தா? அல்லது கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதா?

எங்கள் கட்சித் தலைமை எவ்வாறு அறிவுறுத்துகிறதோ, செயல்படுகிறதோ அதற்குக் கட்டுப்பட்டு கட்சியில் உள்ள அனைவரும் நடக்க வேண்டும். அந்த வகையில்தான் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.

எவ்வித திட்டங்களும் மக்களைச் சென்று சேரவில்லை என்பதாலேயே விளம்பரம் கொடுக்கின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளாரே?

நலத் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளனவா என்பதை வரும் தேர்தல் பறைசாற்றும். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம்.

வரும் தேர்தலில் வி.கே.சசிகலா சாதிப்பாரா?

தனி நபர்கள் குறித்து நான் விமர்சனம் செய்ய வேண்டியதில்லை.

வி.கே.சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று அமமுகவினர் கூறி வருகிறார்களே?

அது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வி.கே.சசிகலா இணைந்தால் அதிமுகவுக்கு பலம்தானே?

அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள்தான் பலம். அதிமுகவை அவர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள்.

இவ்வாறு அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x