Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து உரிமம் பெற புதிய விதிமுறைகள்: சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சாலை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து உரிமம் பெறபுதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தமிழக அரசு, உலக வங்கி சார்பில்தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சாலை பாதுகாப்பு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு நடைமுறைகள் விழிப்புணர்வு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில், உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.8.60 கோடியில் கிழக்குகடற்கரை சாலையில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி வேகக் கட்டுப்பாடு, நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டம், ரூ.4.77 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சாலை பாதுகாப்பு வாகனங்கள் வழங்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்துக்கு சாதனங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் பழனிசாமியும், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கூட்டாக தொடங்கி வைத்தனர். சிறந்த மாவட்டங்களுக்கு சாலை பாதுகாப்பு விருதுகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்கரி பேசியதாவது:

சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சிவங்கி ரூ.40 ஆயிரம் கோடி வழங்கியுள்ளன. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய சாலை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து உரிமம் பெற புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன. சென்னை - பெங்களூரு பசுமை அதிவிரைவு வழி சாலைக்கான பணிகள் 2 அல்லது 3 மாதங்களில் தொடங்கப்படும்.

இவ்வாறு கட்கரி கூறினார்.

முதல்வர் பழனிசாமி பேசியபோது, ‘‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-1 மற்றும் 2-ல் தமிழகஅரசுடன் இணைந்து செயல்பட்டதற்காக உலக வங்கிக்கு நன்றி.தமிழகத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமருக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் நன்றி. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஜ்ஜிய சதவீதமாக குறைக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்’’ என்றார்.

செய்தியாளர்களிடம் கட்கரி பேசியபோது, ‘‘சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x