நாகை மாவட்டத்தில் மக்கள் குறைகேட்க வந்த மு.க.ஸ்டாலினிடம் திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்பு புகார் மனு அளித்த பெண்

நாகை மாவட்டத்தில் மக்கள் குறைகேட்க வந்த மு.க.ஸ்டாலினிடம் திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்பு புகார் மனு அளித்த பெண்
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் மக்களிடம் கோரிக்கை மனு பெற வந்த மு.க.ஸ்டாலினிடம், திமுக ஒன்றியச் செயலாளர் மீது பெண் அளித்தநில அபகரிப்பு புகார் மனு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் கடந்த 14-ம் தேதி பொதுமக்களிடமிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, நாகை வடக்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வசந்தி (43)என்பவர், தன் தந்தைக்கு சொந்தமான நிலத்தை, கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன், போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டார். அந்த நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று ஸ்டாலினிடம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மனு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து வசந்தியிடம் கேட்டபோது, “வேளாங்கண்ணி பூக்காரத் தெருவில் எனது தந்தை ராஜமாணிக்கத்துக்கு சொந்தமான 39.5 சென்ட் நிலம் உள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு, அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை பரிசீலனை செய்தபோது, அந்த இடத்தை கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் போலி ஆவணங்கள் மூலம்பட்டா மாற்றம் செய்து, அவரது தம்பி மரியசூசை நிக்சனுக்கு தானசெட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2020 நவ.11-ம் தேதி நான் அளித்த புகாரின்பேரில், நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரதாபராமபுரத்துக்கு கோரிக்கை மனு பெறவந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்க நானும், எனது மகன் சந்தோஷூம் சென்றோம். அங்கு மனுவை பெட்டியில் போடச் சொன்னார்கள். விண்ணப்பம் கொடுத்த பலரை கூட்டத்தில் பேச அழைத்தனர். எங்களையும் பேச சொல்வார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் எங்கள் பிரச்சினைக்கு மு.க.ஸ்டாலின் மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து திமுக ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன்கூறியதாவது: நான் கடந்த 2009-ல்வசந்தியின் தந்தை ராஜமாணிக்கத்திடம் இருந்து ரூ.13.5 லட்சத்துக்கு அந்த இடத்தை விலைக்கு வாங்கியதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் என்னை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விசாரணை செய்த நீதிபதி கைது ஆணையை ரத்து செய்துவிட்டார். வசந்தியின் மகன் அதிமுக வார்டு செயலாளர் என்பதால், சிலரின் தூண்டுதலின்பேரில் என் மீது பொய்யான புகார் கூறி வருகின்றனர்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வசந்தி விண்ணப்பம் அளித்ததாக கூறுவதே தவறு. அவர்கள் திமுக கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவைபோல, போலியாக தயாரித்து முகநூலில் பதிவிட்டுள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in