

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை தட்டான்குளத்தில் மேலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்.28-க்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவு: தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது. இது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம்அறிவுறுத்துகிறது.
மது விற்பனையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்கோடி வருவாய் கிடைக்கிறது.அதே நேரத்தில் பொது சுகாதாரத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
தமிழக ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ, இல்லையோ மூலைமுடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது. இதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக அரசு பார்க்க வேண்டும். மதுவிலக்கால் பல்வேறு நன்மைகள் ஏற்படும். குற்றங்கள் குறையும், தனி நபர் வருமானம் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை மேம்படும். இதனால் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றனர்.