Published : 04 Nov 2015 07:53 AM
Last Updated : 04 Nov 2015 07:53 AM

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மோட்டார் வாகன விபத்தில் கூடுதல் இழப்பீடு கோரும் வழக்கில் தனி நீதிபதி என்.கிருபாகரன், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காண்பித்த பிறகே ஆவணங்களைத் திருப்பித் தர வேண்டும் என்ற உத்தரவு முறையற்றது. சட்டவி ரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்துவதால், தமிழகத்தில் உள்ள 1.5 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள், 1975-ம் ஆண்டு இருந்ததுபோல அவசரகால நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். எனவே, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட பொது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மனுவில் எந்தத் தகுதியும் இல்லை. ஹெல்மெட் அணிவது தொடர்பான விஷயத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு, நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டதுதான். ஹெல்மெட் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சீராய்வு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் மனுதாரர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தேவையில்லாமல் நெருக்கடி காலத்தையெல்லாம் தொடர்புபடுத்திக் கூறியிருக்கிறார். ஹெல்மெட் அணிவது குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. அது ஒரு நல்ல உத்தரவு. அதனைப் பின்பற்ற வேண்டும். அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை. அந்த உத்தரவு ரத்து செய்யப்படவும் இல்லை.

மனுதாரர் ஒரு வழக்கறிஞராக இருந்தும், இந்த வழக்கைத் தொடர்ந்தால் பின்விளைவு என்னவாக இருக்கும் எனத் தெரிந்தும் மனுதாக்கல் செய்திருக்கிறார். இது வெறும் விளம்பர நோக்கமாகவே இருக்கிறது. நீதிமன்றத்தின் நேரத்துக்கு ஒரு மதிப்பு உள்ளது. அதனால் அதற்கான விலையை மனுதாரர் கொடுத்தாக வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரத்தை தமிழ்நாடு சமரச மையத்தில் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால், இனிமேல் மனுதாரர் தாக்கல் செய்யும் பொதுநல மனு எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x