மதுராந்தகம் ஏரியின் கரைகளை பலப்படுத்தி தூர்வார ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி (கோப்பு படம்)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி (கோப்பு படம்)
Updated on
1 min read

மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஏரிகளில் 2-வது பெரிய ஏரியும், செங்கை மாவட்ட மிகப் பெரிய ஏரியுமான மதுராந்தகம் ஏரி 8 கிராம எல்லைகளில் 2,591 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வந்தவாசி வட்டத்தில் உற்பத்தியாகும் கிளியாற்றில் இருந்தும், உத்திரமேரூர் பகுதியில் உற்பத்தியாகும் நெல்வாய் மடுவு மூலமும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரி மூலம் 7,604 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. விளகாம், முருகஞ்சேரி, முன்னூத்திகுப்பம்,கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை, கடப்பேரி, மதுராந்தகம் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஏரி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதுராந்தகம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். எனினும் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படாமலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலும் இருந்து வந்தது.

`இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி

இதுகுறித்து கடந்த ஜனவரி 17-ம் தேதி `இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக ரூ.120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

நபார்டு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும் இந்நிதி மூலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி 3,950 மீட்டர் நீளமுடைய கரையை பலப்படுத்துதல், ஏரியை ஆழப்படுத்தும்போது எடுக்கப்படும் மண்ணை எதிர்புறத்தில் உள்ள 1,482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்துதல், வரத்து கால்வாய்கள் மற்றும் உபரி நீர் கால்வாய்களை தூர்வாருதல், 6 கலங்கள்களின் மட்டத்தை 50 செ.மீ உயர்த்தி ஏரியின் கொள்ளளவை 694 மில்லியன் கன அடியில் இருந்து 791 மில்லியன் கன அடியாக உயர்த்துதல், ஏரியின் கரை அருகே 1,650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்காக தற்போது ரூ.1 கோடி மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகளுக்கு ஏற்ப தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in