Last Updated : 16 Feb, 2021 10:20 PM

 

Published : 16 Feb 2021 10:20 PM
Last Updated : 16 Feb 2021 10:20 PM

கிரண்பேடி நீக்கம் மக்களுக்குக் கிடைத்த வெற்றி: பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் வரவேற்போம்- முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி

குடியரசுத்தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி புகார் எதிரொலியாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "கிரண் பேடி நீக்கம் புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. பலகட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மக்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வியாதி போயுள்ளது

கிரண்பேடியை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தினால் வரவேற்போம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்றது. இதையடுத்து மத்திய அரசு துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக நாராயணசாமி பொறுப்பு ஏற்றார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்று மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. ஆளும் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் தொடங்கியது.

கள ஆய்வினை துணைநிலை ஆளுநர் தொடங்கினார். மோதல் ஒருகட்டத்தில் முற்றி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பாக முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டார். அதையடுத்து கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதன்பிறகும் நிலைமை சீராகவில்லை.
இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்தன. அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. 144 தடை உத்தரவு போடப்பட்டு பாரதி பூங்காவையும் கிரண்பேடி உத்தரவு படி ஆட்சியர் பூர்வாகார்க் மூடினார். மத்திய ராணுவத்தை வரவழைத்து புதுச்சேரி நகரப்பகுதியில் நிறுத்தினர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.படம்.எம்.சாம்ராஜ்

இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். முதல்வர், அமைச்சர்களை கூட அப்பகுதியில் அனுமதிக்காத சூழல் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு எதிராக தர்ணா, கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை காங்கிரஸார் நடத்தினர். கடந்த 10ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து மக்கள் கையெழுத்து இட்ட மனுக்கள், நான்கு பக்க புகார் மனுவை தந்தனர். கிரண்பேடி துக்ளக் தர்பார் நடத்துவதால் அவரை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தினார்.

இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக இன்று பந்த் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இச்சூழலில் இன்று இரவு குடியரசுத்தலைவர் உத்தரவுப்படி கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x