

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு சிபிஐ விரைவில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. எனவே விரைவில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப். 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.