3 முறை கூட்டணிக்கு ஒதுக்கியதுபோதும்; செய்யாறு, கலசப்பாக்கத்தில் திமுக மீண்டும் களமிறங்க வேண்டும்: உடன்பிறப்புகள் போர்க்கொடி  

3 முறை கூட்டணிக்கு ஒதுக்கியதுபோதும்; செய்யாறு, கலசப்பாக்கத்தில் திமுக மீண்டும் களமிறங்க வேண்டும்: உடன்பிறப்புகள் போர்க்கொடி  
Updated on
1 min read

செய்யாறு, கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தொடர்ச்சியாக 3 முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் உள்ள திமுகவினர், வரும் தேர்தலில் திமுகதான் போட்டியிட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக ஆதிக்கம் அதிகம். செய்யாறு தொகுதியில் 1962 முதல் 2001 வரை நடைபெற்ற 10 தேர்தல்களிலும் போட்டியிட்டு 7 முறை திமுக வென்றுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் 1967 முதல் 2001 வரை நடைபெற்ற 9 தேர்தல்களிலும் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

அதன்பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களிலும் (2006, 2011, 2016) செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. இதில் கலசப்பாக்கம் தொகுதியில் எதிர்க்கட்சியான அதிமுகவே 3 முறையும் வென்றுள்ளது. செய்யாறில் 2006-ல் மட்டும் கூட்டணிக் கட்சி வென்றுள்ளது. அடுத்த 2 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்ததால் அதிருப்தியில் உள்ள திமுகவினர், வரக்கூடிய தேர்தலில் மீண்டும் திமுக போட்டியிட வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுகுறித்துத் திமுகவினர் கூறும்போது, “திமுக எதிர்கொண்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் வென்றது. அதில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியும் அடங்கும். அன்று முதல் இன்று வரை, திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.

2016-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் சூழல் இருந்தபோதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிரொலித்த உள்ளூர் அரசியலின் சதுரங்க விளையாட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில், திருவண்ணாமலை மாவட்டமும் இடம்பெற்றுவிட்டது. வெற்றி வாய்ப்பு உள்ள செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டன. அதன் பயனை அனுபவித்து வருகிறோம்.

இந்த இரு தொகுதிகளையும் தொடர்ச்சியாக 3 முறை (2006, 2011, 2016) கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்ததால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு மீண்டும் ஒதுக்கினால், ஆபத்தில் முடிந்துவிடும். எனவே, வரக்கூடிய தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும். இது தொடர்பான எங்களது விருப்பத்தை திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். அவர், நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இரண்டு தொகுதிகளிலும் உதய சூரியன் உதிக்கட்டும்” என்றனர்.

இவர்களது விருப்பம் நிறைவேறினால், செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in