Last Updated : 16 Feb, 2021 06:44 PM

 

Published : 16 Feb 2021 06:44 PM
Last Updated : 16 Feb 2021 06:44 PM

திருச்செந்தூர் மாசித் திருவிழா இன்று தொடக்கம்: கரோனா பாதுகாப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (பிப்.17) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா இன்று மாலை நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளால் இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை 12 தினங்கள்‌ நடைபெறுகின்றன. இதில்‌ 1-ம்‌ திருநாள்‌ (17.02.2021) அன்று கொடியேற்றம்‌ நிகழ்ச்சியும், 5-ம்‌ திருநாள்‌ (21.02.2021) குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியும், 7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) உருகு சட்ட சேவை, வெற்றிவேர்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு, சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகளும்‌, 8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) பச்சை சாத்தி நிகழ்ச்சியும், 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) தேரோட்டம்‌ நிகழ்ச்சியும்‌, 11-ம்‌ திருநாள்‌(27.02.2021) தெப்ப உற்சவமும்‌ மிக முக்கிய நிகழ்வுகளாகும்‌.

மாசித் திருவிழா நிகழ்ச்சியில்‌ தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில்‌ பக்தர்கள் கலந்து கொள்வார்கள்‌. இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு மற்றும்‌ தேரோட்டம்‌ ஆகியன திருக்கோயிலுக்கு வெளியில்‌ நடைபெறவுள்ளது. மாசித் திருவிழாவில்‌ 1-ம்‌ திருநாள்‌ கொடியேற்றம்‌ அன்று காலை 5 மணிக்கு மேல்‌ 5.30 மணி வரை சுமார்‌ 500 பக்தர்கள்‌ திருக்கோயிலுக்குள்‌ கொடியேற்றம்‌ நிகழ்ச்சி காண அனுமதிக்கப்படுவர்‌.

5-ம்‌ திருநாள்‌ அன்று இரவு 7:30 மணியளவில்‌ குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ நிகழ்ச்சியைக்‌ காண அனுமதிக்கப்படுவர்‌. 7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) அன்று அதிகாலை 4.30 மணி முதல்‌ 5 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும்‌ காலை 8.30 மணியளவில்‌ நடைபெறும்‌ வெற்றிவேல்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு (ஏற்றம்‌ காணல்‌) ஆகிய நிகழ்ச்சிகளைக்‌ காண 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும்‌ சிவப்பு சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவார்கள்.

8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) அன்று பகல்‌ 11.30 மணிக்கு நடைபெறும்‌ பச்சை சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) காலை 7 மணி முதல்‌ 7.30 மணி வரை நடைபெறும்‌ தேரோட்ட நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌. 11-ம்‌ திருநாள்‌ (27.02.2021) இரவு 10.30 மணிக்கு மேல்‌ நடைபெறும்‌ தெப்ப உற்சவ நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவார்கள்.

திருக்கோயில்‌ நிர்வாகத்தின்‌ மூலம்‌ மாசித் திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும்‌ மற்றும்‌ திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வரும்‌ பக்தர்கள்‌ சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து வர வேண்டும்‌. திருக்கோயிலுக்குள்‌ தேவையான இடங்களில்‌ பக்தர்கள்‌ கை கழுவுவதற்கான வசதியும், சானிடைசர்‌ வசதியும்‌ எற்படுத்தி தர வேண்டும்‌. ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ அந்தந்த துறைகளின்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌. திருக்கோயில்‌ மூலமாக அன்னதானம்‌ பார்சல்‌ செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்‌. கொடியேற்றம்‌ நிகழ்ச்சியை பக்தர்கள்‌ திருக்கோயிலுக்கு வெளியிலிருந்து காணும்‌ வகையில்‌ சண்முகவிலாசத்துக்கு வெளியில்‌ (தென்கிழக்கு) பகுதியில்‌ அகன்ற எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா இன்று மாலை நடைபெற்றது. 1-ம் படி செப்புபடி ஸ்தலத்தார் முத்துசாமி கொடிப்பட்டத்தை யானை மீது அமர்ந்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது. நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x