ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்கிறார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்கிறார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Updated on
1 min read

ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாகப்பட்டினத்தில் ரூ.35 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை நாளை மதியம் பாரத பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

அதேபோல் ரூ.700 கோடியில் ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை குழாய் மூலமாக பெட்ரோலியம் கேஸ் கொண்டுவரும் திட்டத்தையும் வழங்கவுள்ளார்.

இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். நாங்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சொன்னவர்கள் மத்தியில் அதனை வெற்று இடமாக தமிழக முதல்வர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சி 3-ம் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறப் போகிறது என்பதை ஸ்டாலின் செல்கின்ற இடங்களில் கண்கூடாக காண்கின்றனர்.

தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் இயல்பாக மக்களை சந்திக்கிறார். அவர்கள் ஒரு கார்ப்பரேட் கம்பெனியால் இயக்கப்படுகின்றனர்.

மக்களை நேரடியாக சந்திப்பதற்கு அவர்களுக்குத் தைரியமில்லை. அவர்கள் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காமல் வீட்டுக்குச் செல்ல இருக்கின்றனர்.

பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது. அதில், கருணாநிதி ரயில் ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்து நாடகமாடினார்.

இந்தியை முழுமையாக எதிர்த்த பெருமை அண்ணாவுக்கு தான் சேரும். அதன் பின்னர் அண்ணாவின் வழியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அண்ணா திமுக தான் உண்மையான திமுக. எங்கள் கட்சி தான் அண்ணா தொடங்கிய திமுக. தற்போதைய திமுக குடும்ப கட்சி. அவர்கள் இந்தியிலும் பேசுவார்கள், பல வேஷங்கள் போடுவார்கள்.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுவதால், திமுக எம்பிக்கள் தங்களுக்குரிய சிபாரிசு கூப்பன்களை வேண்டாம் என தெரிவிக்க அதனை ஒப்படைத்திருந்தால் அவர்களது தமிழுணர்வை பாராட்டலாம்.

பிழைப்புக்காக தமிழ்... தமிழ் என கூறுகின்றனர். தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால் கேந்திரிய வித்யாலயா பள்ளி எங்களுக்கு வேண்டாம் என அவர்கள் கூறி இருக்க வேண்டும்.

ஆனால் திமுகவைச் சேர்ந்த 37 எம்பிக்களும் சிபாரிசு கூப்பன்களை வாங்கி விலைக்கு விற்கின்றனர். இது ஊரறிந்த உண்மை. இரட்டை வேடம் போடுவது திமுகவுக்கு கைவந்த கலை, என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in