

கோவையில் 2 லட்சம் புத்தகங்களைக் கொண்டு ஒரு தனியார் நூலகத்தைத் தொழில் முனைவோர்கள் சேர்ந்து அமைத்துள்ளனர்.
கோவை பீளமேடு ஃபன்மால் செல்லும் சாலையில், 'ஆம்னி புக்ஸ்' நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பீளமேட்டைச் சேர்ந்த தொழில்முனைவோரான கோவிந்தராஜ் என்பவர், தனது சகோதரர்கள் யுவராஜ், ஸ்ரீதர் ஆகியோருடன் இணைந்து இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இந்நூலகத்தில் இரண்டு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து 'ஆம்னி புக்ஸ்' நூலக நிறுவனர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பொதுமக்கள் கல்வி மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், இந்நூலகத்தைத் தொடங்கியுள்ளோம். சென்னையில் உள்ள எங்களது 'ஓம் சக்தி' புத்தக நிலையத்தில் கிடைத்த வணிக அனுபவத்தைக் கொண்டு, கோவையில் உள்ள மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் இதைத் தொடங்கியுள்ளோம்.
இந்நூலகம் 6,000 சதுர அடியில் 3 மாடிக் கட்டிடத்தில் ஏசி அறை, லிஃப்ட் வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான புத்தகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. கற்பனைத் திறம் வாய்ந்த புத்தகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, மக்கள் தொடர்பு, பொருளாதாரம், அரசியல், வேளாண்மை, கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புத்தகங்கள் உள்ளன.
மாதந்தோறும் ரூ.225 உறுப்பினர் கட்டணம் செலுத்தினால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய சேகரிப்புகளைக் கொண்ட புத்தகங்களை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு வாசகர்களுக்கென பல சிறப்பம்சங்களைக் கொண்ட சலுகைகளை வழங்க உள்ளோம்.
நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடப்புத்தகங்களும், கதை புத்தகங்களும் உள்ளன. பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள், போட்டித் தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகள், கட்டுரைகள், தேர்வுக்குத் தேவையான புத்தகங்களும் இங்கு உள்ளன. வரும் காலங்களில் கிராமங்களிலும் இந்தச் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.