Published : 16 Feb 2021 03:29 PM
Last Updated : 16 Feb 2021 03:29 PM

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு; மத்திய பாஜக அரசின் இரட்டை நிலை: மார்க்சிஸ்ட் கண்டனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப்.16) வெளியிட்ட அறிக்கை:

"அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை நாளுக்கு நாள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை குறைந்துகொண்டே வந்தாலும்கூட இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதில்லை என்பதோடு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மிக அதிகமான வரிகளே இத்தகைய விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாகும்.

கடந்த சில நாட்களாகவே, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்று தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85 ஆகவும் உள்ளது. விரைவில் இது ரூ.100-ஐத் தொட்டுவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இத்தகைய கடுமையான விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் சூழலில்தான் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த டிசம்பர் இறுதியில் ரூ.660 ஆக இருந்தது. பின்னர், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது அதன் விலை ரூ.788 ஆக உள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் விலை உயர்வு என்பது ரூ.128 ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறத்தில் இத்தகைய கடுமையான விலை உயர்வை மக்கள் மீது சுமத்தும் மத்திய அரசு, மறுபுறத்தில் மானியத்தையும் வெட்டிச் சுருக்கிவிட்டது. உதாரணமாக, கடந்த 2019இல் ஒரு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.174 ஆக அளிக்கப்பட்டு வந்த மானியத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் ரூ.24 ஆக மட்டுமே வழங்கப்படுகிறது. இத்தகைய குறைவான மானியம் கூட பல பயனாளிகளுக்கு முறையாக அளிக்கப்படுவதில்லை. இத்தகைய நடைமுறை தொடர்ந்தால் விரைவில் மானியம் முற்றாக நிறுத்தப்படும் ஆபத்தும் உள்ளது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக சலுகைகளை அளிப்பதும், சாதாரண ஏழை எளிய மக்களின் சேமிப்பைச் சூறையாடும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை மிகக் கடுமையாக உயர்த்துவதுமான இரட்டை நிலை என்பதே மத்திய பாஜக அரசின் அணுகுமுறையாக உள்ளது. இத்தகைய மிக மோசமான அரசின் கொள்கைளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கைவிட வலியுறுத்தியும் வலுவான போராட்டங்களை நடத்திட வேண்டுமென கட்சி அணிகளைக் கேட்டுக் கொள்வதோடு, கட்சியின் சார்பில் நடைபெறும் இத்தகைய போராட்டங்களுக்கு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x