

புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே ராஜினாமா கடிதம் தந்திருந்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று (பிப். 15) மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த சூழலில், இன்று (பிப். 16) காலை ஜான்குமாரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் நாளை புதுச்சேரி வரும் சூழலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், எம்எல்ஏ செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர்.
இதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, எம்எல்ஏ செல்வம் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். சிறிதுநேரம் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ரங்கசாமி கூறியதாவது:
காங்கிரஸ், திமுக கூட்டணியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. தானாக முன்வந்து காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும். இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்க்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தானாக முன்வந்து பதவி விலகுகின்றனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கே அதிருப்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களே புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டாக எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கூட தரவில்லை. முதல்வர் நாராயணசாமி எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த ஆட்சி மிகவும் மோசமான அரசு. ஆள்வதற்கு தகுதியற்ற அரசு.
நாராயணசாமி தன்னால் முடியாது என்பதை எப்போதும் ஒப்புக்கொள்ளமாட்டார். மற்றவர்கள் மீது பழிபோடுவார். ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் எப்படி தடுக்க முடியும்? எதிர்க்கட்சிகள் செயல்பட விடுவதில்லை என எங்கள் மீது குற்றம்சாட்டுவார். ஆளுநர் மீது குற்றம்சாட்டுவார்.
திடீரென வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவார். முரண்பட்ட கருத்துக்களை கூறுவது அவர் வழக்கம். அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கூட செயல்படுத்த முடியவில்லை. மோசமான நிலையில் புதுவை உள்ளது. ஒரு திட்டத்தைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆட்சி அமைக்க நீங்கள் உரிமை கோருவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, "முதலில் அவர்கள் பதவி விலகட்டும், பின்னர் பேசலாம்" என தெரிவித்தார்.
இந்நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான் குமார் ஆகியோரின் எம்எல்ஏ பதவி ராஜினாமாவை ஏற்றதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.