

அமமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா? சசிகலாவை நீங்கள் சந்திப்பீர்களா? போன்ற கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் பதில் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று பயனாளிகளுக்கு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் என்.நடராஜன் பதில் அளித்தார்.
2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு, "அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்" என்றார்.
அமமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "அதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்" என்றும், அந்த நிலைப்பாட்டைக் கட்சித் தலைமை எடுத்தால் நீங்கள் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, "அதுபோன்று முடிவெடுக்கும் நிலையில் கட்சித் தலைமை இல்லை" என்றும் தெரிவித்தார்.
வி.கே.சசிகலாவை நீங்கள் சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு, "நிச்சயம் கிடையாது. சந்திக்க மாட்டோம்" என்றார்.