

2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் ப.சிதம்பரம் வெற்றியை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங். சார்பில் ப.சிதம்பரமும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர். கடும் இழுபறியாக நடந்த வாக்குப்பதிவில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
12 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டு அதிமுகவிலிருந்து ராஜ கண்ணப்பன் வெளியேறினார். பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். 2006ஆம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைத்தார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.
2009இல் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகி, அதிமுகவில் மீண்டும் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரத்திடம் தோல்வியுற்றார். பின்னர் அதிமுகவில் தொடர்ந்த அவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் வெளியேறி திமுகவுக்கு ஆதரவளித்தார். பின்னர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 13 அன்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பாக இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, ஆர்.தியாகராஜன் ஆகியோரும், ராஜ கண்ணப்பன் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சரவணக்குமாரும் ஆஜராகி இறுதி வாதத்தை வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தீர்ப்பளித்தார். 2009 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும். அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தரப்பு ப.சிதம்பரம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை நிரூபிக்காததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டார்.