

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி நேரடி நியமனங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை செல்லாது. மதிப்பெண் ரேங்க் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை 4 வாரங்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறுடிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிக்க இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை அரசு 2003 முதல் கடைபிடிக்கிறது.
இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி விதிகள் பிரிவு 35(ஏ)படி, மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் 2016-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசுசார்பில் கடந்த 2016 செப்.9-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் இயற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு, இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
மதிப்பெண் அடிப்படையில்..
இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், ‘‘பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, சாதி மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’’ என்று தீர்ப்பளித்தனர்.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வு, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், தமிழக தலைமைச் செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர்உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்களும் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.