

சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக கிறிஸ்தவ ஜனநாயகக் கூட்டமைப்பின் மாநில மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, “சிறுபான்மை மக்கள்யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஒரு கட்சிக்கு கொள்கை என்பது நிலையானது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் மாறி, மாறி கூட்டணி அமைக்கும். எனவே கொள்கை வேறு, கூட்டணி வேறு.
நாங்கள் கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அவரவர் மதம் அவரவருக்குப் புனிதமானது. மற்ற மதத்தை தவறாகப் பேசுவதை அதிமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எப்போதும் அரசு உங்க ளுக்கு துணையாக இருக்கும்” என்றார்.
பின்னர் நாமக்கல் குமாரபாளை யத்தில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
அருந்ததியர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.82கோடி வங்கி இணைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 55 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் நவீன கழிப்பிடங்கள், நல்ல சாலை அமைக்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோரின் பணி வரன்முறை செய்ய அரசுபரிசீலிக்கும். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தோல் பணியாளர்கள் நலவாரியத்தில் பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். சாதி மதத்துக்கு அப்பாற்றப்பட்ட கட்சி அதிமுக. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
பொல்லானுக்கு மணிமண்டபம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கொங்கு மண்டலத்துக்கு பெரும் பங்கு உண்டு. தீரன் சின்னமலையின் வெற்றிக்கு முக்கிய கருவியாக செயல்பட்டது வீரர் பொல்லான். அந்த வகையில் வருங்கால சந்ததியினர் வீரர் பொல்லானை அறிந்துகொள்ளும் வகையில் அவருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.