

சென்னை கே.எப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.40 கோடி அளவுக்கு பணம் மற்றும் தங்கத்தை கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எப்.ஜே என்ற பெயரில் நகைக்கடை இருந்தது. இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநராக சுஜித் செரியன், இயக்குநர்களாக அவரது மனைவி தான்யா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் இருந்தனர். பணச்சீட்டு நடத்துவதுபோல, இந்நிறுவனம் பல்வேறு பெயர்களில் தங்க நகைசேமிப்பு திட்டங்களை அறிவித்தது. அதன்மூலம், பொதுமக்களிடம் இருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டது. ஆனால், நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணமோ, தங்கத்தையோ திருப்பிக்கொடுக்கவில்லை. நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்து விட்டன.
அதைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கே.எப்.ஜே ஜுவல்லரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்த புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன. 2 ஆயிரம் பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி ரூ.40 கோடிஅளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கே.எப்.ஜே ஜுவல்லரி நிர்வாகிகள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓர் ஆண்டு கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் நேற்று கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது “தொழிலில்திடீரென நஷ்டம் ஏற்பட்டு விட்டது. சொத்துகளை விற்று எங்கள்பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கே.எப்.ஜே நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், எங்களை ஏமாற்றும் நோக்கத்திலேயேதான் பணம் மற்றும் தங்கத்தை எங்களிடம் இருந்து வாங்கியுள்ளனர். கே.எப்.ஜே நிறுவன நிர்வாகிகள் சென்னையில் பல இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.