தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
2 min read

தமிழகத்தில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழை சற்று ஓய்ந்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

இந்நேரத்தில் இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்வதும், இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சிந்தித்து திட்டம் வகுப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

சென்னையில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக களைய வேண்டும். ஒருவேளை அடுத்த சில நாட்களில் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் மழை பாதிப்புகள் அதிகரித்த பிறகு கடலூர் மாவட்டத்தில் மழை-வெள்ள நிவாரணப் பணிகள் சற்று தொய்வடைந்து விட்டன.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் வீடுகளில் குடியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளை அரசே கட்டித் தர வேண்டும்.

மழை நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி நிதி போதுமானது அல்ல. கடலூர் மாவட்டத்தில் மட்டுமே சேதத்தின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோர வேண்டும்.

மத்திய அரசின் அதிகாரிகள் குழுவை வரவழைத்து மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.

ஒவ்வொரு பயிருக்கும் அதன் சந்தை மதிப்புக்கு குறையாமல் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தொடர் மழையால் கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகக்கடுமையாக பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். முதலமைச்சர் தான் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அல்லது இந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் இதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். துணைத் தலைவரிடம் அனைத்து நிர்வாக அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். இந்த ஆணையத்திற்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவில் இந்த ஆணையத்துக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். புயல், மழை உள்ளிட்ட இயற்கை சேதங்கள் ஏற்படும் போது மாநில அரசை எதிர்பாராமல் இந்த அமைப்பே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும். மழை, புயல் வருவதற்கு முன்பாகவே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றிலிருந்து தேவையான அதிகாரிகளை அழைத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2011 ஆண்டின் கடைசி நாளில் தாக்கிய தானே புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பாடம் கற்றிருக்க வேண்டும். எதிர்கால நலனைக் கருத்திக் கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. ஆனால், 2004 ஆம் ஆண்டில் சுனாமி தாக்குதலில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் கவலையடைந்த மத்திய அரசு, 2005 ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

அதன்பின்னர், இந்தியாவின் பேரிடர் மேலாண்மையில் அந்த ஆணையம் மிகச்சிறப்பாக பங்காற்றி வருகிறது. தமிழகத்திலும், பேரிடர் மேலாண்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்"

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in