

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “2011 -ல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது கோவை மாவட்டம்.
கரோனா காலத்திலும் முதல்வர் பழனிசாமி நேரடியாக மக்களை சந்தித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பயிர் கடன்களை ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு எதுவுமே செய்யாதவர் ஸ்டாலின். அவரது முதல்வர் கனவு பலிக்காது. மீண்டும் பழனிசாமி தமிழக முதல்வராவது உறுதி" என்றார்.
விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட் டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏ-க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜுனன், வி.சி.ஆறுகுட்டி, ஒ.கே.சின்ராஜ், கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், 123 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, எவர்சில்வர் சமையல் பாத்திரங்கள், குடம், அண்டா, குத்துவிளக்குகள், குக்கர், சூட்கேஸ் உள்ளிட்ட 73 வகை சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.