Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றியை மக்கள் அளிப்பார்கள்: இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் சாலையிலுள்ள முள்ளிப்புரத்தில் நேற்று காங்கயம் கால்நடை திருவிழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார்.

விழாவில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எப்படி பெரிய வெற்றியை திமுகவுக்கு அளித்தார்களோ, அதைவிட பெரிய வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளிக்க உள்ளனர். பிரதமர்மோடி திருக்குறள், அவ்வையாரின் நூல்களை மேற்கோள் காட்டி பேசுகிறார். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு மட்டும் எதுவும் செய்யமாட்டார். சமஸ்கிருதத்தை மட்டும் உள்ளே நுழைக்க பார்ப்பார்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே குரல் எழுப்பி வருகிறார். நாட்டிலேயே பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் உள்ள ஒரே மனிதர் ஸ்டாலின் மட்டுமே.

வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உள்ளிட்டவற்றில்தான் வெற்றிநடை போடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காளைகளுடன், பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.500, வெற்றி பெற்ற காளைகளுக்கு ரூ.5 லட்சம்வரை பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைவர்தான் முடிவு செய்வார்

பின்னர் காங்கயத்தில் செய்தியாளர்களிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கூறும்போது, அதிமுக சார்பில் ‘நீட்' தேர்வு ரத்து தொடர்பாக சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், மத்தியிலிருந்து திருப்பி அனுப்பியதை, அதிமுக அரசு வெளிப்படையாக சொல்லவில்லை. பாஜகவினர் தெரிவித்த பிறகே அனைவருக்கும் தெரியவந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தால் எனது முதல் போராட்டம் நீட் தேர்வு ரத்து தொடர்பாகவே இருக்கும். மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி தொடர்வது குறித்தும், திமுக கூட்டணிக்கு வர தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கும், அதுபோன்ற முடிவுகளை கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் எடுப்பார்" என்றார்.

ரூ.3 லட்சம் நிதி

சென்னை திரும்புவதற்காக கோவை விமானநிலையத்துக்கு நேற்று இரவு வந்த உதயநிதி ஸ்டாலின், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள ஆனைமலையைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரர் கொற்றவேலின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினரிடம், கோவை மாநகர கிழக்கு மாவட்ட இளைஞரணியின் மூலம் ரூ.3 லட்சம் நிதியைவழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x