Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அதிமுக மீது எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதால், அதிமுக மீது தமிழகத்தில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் அப்துல் சமதுவின் இல்ல திருமண நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர்ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர், ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ என்ற வார்த்தை ட்விட்டரில் பிரபலமாகியது. ஏன் என்றால் தமிழக நலனுக்காக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழகத்தின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு முறையாக நிதி ஒதுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினையிலும் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

ஆனால், ’யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று வந்த ஒரே பிரதமர்’ என பெருமையுடன் கூறியுள்ளார். இலங்கைகடற்படையால் பிடித்து செல்லப்படும் தமிழக மீனவர்கள் மற்றும்மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இலங்கையில் இருந்து திரும்ப வரும்தமிழர்களின் மீன்பிடிப் படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x