

தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இதேபோல கரோனா காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி வழங்குவதற்குப் பதிலாக ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன்மூலமும் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில், "அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் காமராஜுக்கு எதிராக நான் அளித்த 2 புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பியுள்ளது. இது சட்டவிரோதம். எனவே அமைச்சர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
அதேபோல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலரின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் அப்பாவு தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலாளர் அதில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை எனக்கூறி புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதையடுத்து இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை 5 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.