

கடலாடி ஒன்றிய திமுகவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் முதுகுளத்தூரில் கண்ணில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தரப்பினருக் கும், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தரப்பினருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
கடலாடி ஒன்றிய திமுக செய லராக இருந்தவர் டி.ராஜசேகர். இவர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் ஆதரவாளர். இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து 3 தினங்களுக்கு முன்பு கடலாடி ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், 150 கிளைச் செயலாளர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அறிவிப்பின்றி நிர்வாகிகளை நீக்கியதற்கு மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கக் கோரி முதுகுளத்தூரில் உள்ள முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் வீட்டில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காயாம்பு, மாவட்டப் பிரதிநிதி அரண்மனைச்சாமி, விவசாய அணி துணைச் செயலாளர் குருசாமி, ஊராட்சி மன்றத் தலை வர் கண்ணன் உட்ட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்ணில் கருப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து டி.ராஜசேகர் கூறியதாவது:
கட்சியின் விசுவாசிகளை நீக்கிவிட்டு மாற்றுக் கட்சியினருக்குப் பதவி வழங்கியுள்ளனர். நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும். இல்லையெனில் தேர்தலைப் புறக்கணிப்போம். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒழுங்கான தலைமை இல்லாததால் தொண்டர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் திரிகிறோம். அதனால் கண்ணில் கருப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்றார்.