

மறைந்த தமாகா முன்னாள் எம்.பி. ஞானசேகரனுக்கு மதுரை ஆவின் பாலகம் அருகே நினைவு ஸ்தூபியை அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் அவரது படத்தையும் திறந்து வைத்து தென்மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர், வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறோம். தமிழகத்துக்கான பல்வேறு நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்கின்றன. மதுரையில் சாலை மேம்பாடு, பாலம் அமைப்பது, விமான நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தாலும், மதுரை வளரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை முழு வடிவம் பெற பல கட்டப் பணிகள் நடைபெற வேண்டும். முதல் கட்டமாக ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் கடன் கொடுக்க வேண்டி உள்ளது.
நீண்ட கால நிரந்தரத் திட்டம் வரும்போது, தற்காலிக இடர்பாடு இருப்பது வழக்கம். குறிப்பிட்ட காலத்துக்கு மதுரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.