

பத்திரப் பதிவுத்துறை சர்வரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், நல்ல நேரத்தில் பத்திரப் பதிவு செய்ய காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பத்திரப் பதிவுத்துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில், ரூ.1,000-க்கும் குறைவான கட்டணம் ஏடிஎம் கார்டு மூலமாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் செலுத்த முடியும். அதற்கு அதிகமான கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்வதற்காக, மின்னணு பரிமாற்ற முறையில் கட்டணம் செலுத்தியவர்கள் பலருக்கு, அதற்கான ரசீது வராமல் போனது. இதனால், அவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையால் சிரமத்துக்குள்ளாகினர்.
சேலம், தம்மம்பட்டி, வீரபாண்டி, தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில்உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இதே நிலை இருந்தது. சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு காத்திருந்த சிலர் கூறியதாவது:
முகூர்த்த நாளில், புதிய வீடு, மனை ஆகியவற்றுக்கு பத்திரம் பதிவு செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். அதற்காக நேற்று முன்தினமே, பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை, மின்னணு பரிமாற்ற முறையில் செய்துவிட்டோம். எங்களது வங்கிக் கணக்கில் இருந்து, கட்டணம் எடுக்கப்பட்ட நிலையில், பத்திரப் பதிவுத்துறை சர்வரில் ஏற்பட்ட பிரச்சினையால், எங்களுக்கு கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது வரவில்லை.
முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பல மணி நேரம் பத்திரப்பதிவுத்துறை சர்வரில் ஏற்பட்டிருந்த பிரச்சினை தீரவில்லை. மதிய வேளைக்குப் பின்னரே ஒரு சிலருக்கு ரசீது கிடைத்து அவர்கள் பத்திரங்களை பதிவு செய்தனர். பலரும் நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் போனதால் கவலையடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.