4 ஆண்டுகளில் 400 ஆண்டு சாதனைகள்: முதல்வர் குறித்து அமைச்சர் பெருமிதம்

திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் உதயகுமார். படம் மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் உதயகுமார். படம் மு. லெட்சுமி அருண்
Updated on
1 min read

``தமிழகத்தில் இன்னும் 400 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, 4 ஆண்டுகளில் முதல்வர் பழனிசாமி செய்துள்ளார்,” என, மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்தகூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம், உதயகுமார் கூறியதாவது:

தமிழக முதல்வரின் 6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் வரும் 17-ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்குகிறது. அடுத்த நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு அவர் அளித்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சார ஏற்பாடுகள் இருக்கும்.

அதிமுக ஆட்சியில் எல்லா திட்டங்களும் தடையில்லாமல் செயல்படுத்தப்படுகிறது. கரோனா காலத்திலும் விளை பொருட்கள் தடைபடாமல் விற்பனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால்தான் முதல்வரை, பிரதமர் பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் இருக்க அடித்தளத்தை இட்டுள்ளார்.

இப்போது எதில் குறை இருக்கிறது. திமுக தலைவரின் பார்வையில்தான் குறை இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினர் மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிரந்தரமானது அல்ல. மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்டச் செயலாளர் கணேசராஜா, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், சுதாபரமசிவன், இசக்கி சுப்பையா, ஏ.கே.சீனிவாசன், மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in