கோவையில் வரும் 19-ம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

கோவையில் வரும் 19-ம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
Updated on
1 min read

கோவை கொடிசியாவில் வரும் 19-ம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார்.

இதில் அந்தந்த பகுதி பிரச்சினைகளை, பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி, அதை தீர்க்க வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி, ஒரு பெட்டியில் வைத்து பூட்டுகிறார்.

பின்னர், திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல் 100 நாட்களுக்குள் மக்கள் அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அதன்படி, திமுக சார்பில், கோவையில் வரும் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடிசியாவில் உள்ள கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர், அன்று மாலை 4.30 மணிக்கு காரமடையில் நடக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பின்னர், அன்று இரவு கோவையில் தங்கும் மு.க.ஸ்டாலின், மறுநாள் 20-ம் தேதி (சனிக்கிழமை) பொள்ளாச்சியில் நடக்கும் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

கட்சியினர் ஆலோசனை:

கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சி தொடர்பான, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று(15-ம் தேதி) நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ (மாநகர் கிழக்கு), பையா என்ற கிருஷ்ணன் (மாநகர் மேற்கு) தலைமை வகித்தனர்.

இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் மு.க.ஸ்டாலின் வருகை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கூறும்போது,‘‘ கொடிசியாவில் நடக்கும்,‘‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ நிகழ்ச்சியில், அனைத்து தரப்பு பொதுமக்கள், தொழில்துறை உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்கள தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். உதவித் தொகை கேட்டு, இலவசப் பட்டா கேட்டு என எவ்விதமான கோரிக்கை குறித்தும் மனு அளிக்கலாம்.

நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதற்கு இளைஞர் அணியினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவர்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in