

ஜல் ஜீவன் திட்டத்திற்கு 15-வது நிதிக்குழு மானியம், பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க ஊராட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் நீர் வழங்கும் வகையில் ஜல்ஜீவன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லி., வழங்கப்படும். கோடை காலங்களில் அதிகபட்சமாக 43 லி., வழங்கப்படும்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 1.27 கோடி வீடுகளில் 21.85 லட்சம் வீடுகளுக்கு ஏற்கெனவே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு உள்ளது. இதையடுத்து ஜல்ஜீவன் திட்டத்தில் 34 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஜல்ஜீவன் திட்டம் நிதி மட்டுமின்றி ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15-வது நிதிக்குழு மானியம், பொது நிதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 15-வது நிதிக்குழு மானியம், பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க ஊராட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர்கள் கூறுகையில், ‘இத்திட்டத்திற்கு ஏற்கனவே 2019-20-க்கு ரூ.373.10 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்தது.
மேலும் 2020-21-க்கு 917.44 கோடியை ஒதுக்கியது. ஆனால் இத்திட்ட நிதியை முறையாக செலவழிக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே மத்திய அரசே மாநில அரசை கண்டித்துள்ளது.
இதனால் திட்ட நிதியை பயன்படுத்தினாலே போதும். ஆனால் ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் 15-வது நிதிக்குழு மானியம், பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க கேட்கின்றனர்.
பொது மற்றும் நிதிக்குழு மானிய நிதியை பயன்படுத்தி தான் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். அதையும் கேட்டால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும், என்று கூறினர்.