பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக வெற்றி: துணை முதல்வர் ஓபிஎஸ் ஊரில் பரபரப்பு

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்ற திமுக.கவுன்சிலர் தங்கவேலுவிற்கு திமுக.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்ற திமுக.கவுன்சிலர் தங்கவேலுவிற்கு திமுக.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Updated on
1 min read

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக.மற்றும் அமமுக.கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுக.கவுன்சிலர் தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் திமுக.8 இடங்களிலும், அதிமுக 6இடங்களில் தேமுதிக மற்றும் அமமுக தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

அமமுக.ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்று திமுக.திட்டமிருந்த நிலையில் 8வது வார்டு திமுக உறுப்பினர் செல்வம் அதிமுக.,விற்கு மாறினார். இதனால் திமுக ஒன்றிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைந்தது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்றுமுறை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதிமுக.கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாகவே இருந்தது.

இந்நிலையில் 7வது வார்டு உறுப்பினர் தங்கவேல் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

பிப்.15-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்று தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

பெரியகுளம் உதவி ஆட்சியர் சினேகா முன்னிலை வகித்தார். காவல் துணை காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதில் தேமுதிக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் பாக்கியம், மருதையம்மாள் ஆகியோர் ஆதரவுடன் திமுக.கவுன்சிலர் தங்கவேல் தலைவராக வெற்றி பெற்றார்.

இவரை திமுக.சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், திமுக.செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, நிர்வாகிகள் அருணாசேகர், எம்.எம்.பாண்டியன், முரளி, அன்பழகன் உட்பட பலரும் வாழ்த்தினர்.

இது குறித்து மூக்கையா கூறுகையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக.வெற்றி பெறும் என்பதற்கான முன்னோட்டம் ஆகும் என்றார்.

மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் திமுக, தேமுதிக.ஆதரவுடன் அமமுக.கவுன்சிலர் மருதையம்மாள் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in