

பராமரிப்பு இல்லாததால் புதுச்சேரி, காரைக்காலில் அரசு குடியிருப்புகளில் காலியாக 345 வீடுகள் உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அனைத்திலும் பல வீடுகள் ஆண்டு கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து, இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் பெற்றார். அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இன்று (பிப். 15) புகார் தந்துள்ளார். அதுபற்றி ரகுபதி கூறியதாவது:
"புதுச்சேரியில் லாஸ்பேட்டை, உழந்தை ஆகிய இடங்களில் அரசு குடியிருப்புகள் உள்ளன. இதில், உழந்தையில் 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக உள்ள 186 வீடுகளில் 49 வீடுகளும், லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் 1 முதல் 5 பிரிவுகளாக உள்ள 616 வீடுகளில் 203 வீடுகளும் காலியாக உள்ளன. இதுபோல், காரைக்கால் கோட்டுச்சேரியில் உள்ள 102 வீடுகளில் 33 வீடுகளும், காரைக்கால் நேரு நகரில் உள்ள 60 குடியிருப்புகளுமே 2015 முதல் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் நலன் கருதி பல கோடி செலவு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும், போதிய வசதி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்களின் முறையான பராமரிப்பின்மையாலும், பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த குடியிருப்புகளை விரும்பவில்லை.
மேலும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் வீட்டு வாடகைப்படி மிக அதிகமாக உள்ளதாலும், இந்த வாடகைக்கு ஏற்ப குடியிருப்புகளில் போதிய வசதிகள் இல்லாததாலும் 2016-க்குப் பிறகு பல அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, தனியார் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால்தான் பெரும்பாலான குடியிருப்புகள் காலியாக உள்ளன. இதனால், அரசு நிதி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வீணாகி வருகிறது.
குறிப்பாக, பொதுப்பணித்துறையினர் 14 ஐஏஎஸ் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 54 ஆயிரத்து 88 ஆயிரம் செலவு செய்து சீரமைத்துள்ள போது, அரசு ஊழியர்களின் 966 குடியிருப்புகளுக்கு இதே பத்தாண்டுகளில் வெறும் ரூ.65 லட்சத்து 69 ஆயிரம் செலவு செய்து பாரபட்சம் காட்டுவது ஏன்? எனவே, பழுதான குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். வீட்டு வாடகை பிடித்தம் செய்து தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளை நவீனமயமாக்கி அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கும்பட்சத்தில் வீட்டு வாடகை படி மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான தொகை வருமானம் கிடைக்கும். எனவே, இந்த மனுவினை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.