Published : 15 Feb 2021 05:12 PM
Last Updated : 15 Feb 2021 05:12 PM

சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் 5000 டன் குப்பைகள்: மறுசுழற்சி மூலம் இயற்கை உரம், உயிரி எரி வாயுவாக மாற்றம்: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை

சென்னையில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகளில் ஈரக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பதப்படுத்தப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைக்கான மதிப்பீடு 2021-ல் உள்ள வழிகாட்டுதலின்படி தூய்மைப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா தொடங்கியது.

ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் ராயபுரம் மண்டலத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் அங்கம்மாள் இன்று (15.02.2021) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் ஆணையாளர் அவர்கள் பேசியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ முழுமையாக செயல்படுத்தும் விதமாக வீடுவீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் சேகரிக்கப்படும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகளில் ஈரக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பதப்படுத்தப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை மாநகரில் சேகரமாகும் அனைத்து திடக்கழிவுகளையும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்த்து மறுசுழற்சி செய்து பொதுமக்களுக்கு சுகாதார மற்றும் சுத்தமான சூழலை ஏற்படுத்தவும், நிலம் மாசுபடுதலை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் சேகரமாகும் குப்பைகளில் அளவுகளை படிப்படியாக குறைத்து சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுதலை தவிர்க்க குப்பைகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயார் செய்ய கட்டமைப்புகள், தாவர கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் கட்டமைப்புகள், உலர்குப்பைகளை நவீன முறையில் எரியூட்டும் கலன்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து திரவ எரிபொருள் தயார் செய்யும் ஆலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலம் மற்றும் நிலத்தடி நீரை மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும் குப்பை கொட்டும் வளாகங்களில் BIO-MINING முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அரசின் சார்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த தூய்மைப் பணிகளில் ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது.

சென்னையில் தூய்மையைப் பராமரிக்க மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அங்காடி வளாகங்களில் உள்ள சங்கப் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்கள் பங்களிப்பை பல்வேறு வழிமுறைகளில் வழங்கி வருகின்றன.

இந்தத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகளுக்கு உறுதுணையாக உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் தன்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஆணையர் பேசினார்.

தொடர்ந்து, தூய்மைக்கான மதிப்பீடு 2021-ல் உள்ள வழிகாட்டுதலின்படி தூய்மைப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தில் கீழ் நிதியளித்த நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உணவு விடுதிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி, வட்டார துணை ஆணையர்கள், உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x