கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி நாளை நடைபெற இருந்த பந்த் போராட்டம் ஒத்திவைப்பு: நாராயணசாமி

நாராயணசாமி: கோப்புப்படம்
நாராயணசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

நாளை (பிப். 16) துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற கோரி நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சார பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பாடலை வெளியிட்டு முதல்வர் நாராயணசாமி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று (பிப். 15) கூறியதாவது:

"அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாளை மறுதினம் (பிப். 17) புதுவைக்கு வருகிறார். அரசியல் கலப்பில்லாத 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதியம் 12 மணிக்கு புதுவைக்கு வரும் ராகுல்காந்தி சோலைநகரில் அரசியல் சாராத மீனவ மக்களோடு உரையாடுகிறார். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இ-மெயில் மூலம் தங்கள் கல்லூரிக்கு வரும்படி ராகுலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளோடு கலந்துரையாடுகிறார். அந்நிகழ்வு எங்கு நடைபெறும் என்பது விரைவில் தெரிவிப்போம். இதனைத்தொடர்ந்து, மதியம் 3 மணியளவில் ஏஎப்டி மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். புதுச்சேரியில் மூன்று நிகழ்வுகளில் ராகுல் பங்கேற்கிறார்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா, உண்ணாவிரதம் என பல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாளை பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வர்த்தர்கள், வியாபாரிகள் பந்த் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கூட்டணி கட்சியினரும் பந்த் போராட்டத்தை தவிர்க்கும்படி கோரினர். இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணி பந்த் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in