

சோழர்களின் வணிகத் தலைநகராக விளங்கிய பூம்புகாரின் மீனவப் பெண்களுக்கு, சங்க இலக்கிய பாடல்களில் தனித்த, பெருமைக்குரிய இடமுண்டு. அவர்களின் பண்பாடும் நாகரிகமும் வாழ்க்கைப்பாடும் அழகும் செறிவும் கொண்டது. ஆனால், இன்றைக்கு பொருளாதார, சமூக அடுக்கில், மிகவும் கீழ்மட்டத்தில் பூம்புகாரின் மீனவப் பெண்கள் உள்ளனர். இலங்கை கடற்படையால் தொல்லைகள், உயிருக்கு உத்தரவாதமில்லாத மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் கணவர்கள், மதுவுக்கு அடிமையாகி உயிரிழக்கும் தங்கள் வீட்டு ஆண்கள், வெளிநாடுகளில் மீன்பிடி தொழில் செய்யும் ஆண்கள் என, பெரும்பாலான குடும்பங்களில், மீனவப் பெண்களே ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுமக்கும் நிலையில் உள்ளனர். கடலில் இருந்து மீன்கள் கரைக்கு வந்துவிட்டால், அது மீனாகவும், கருவாடாகவும் நமது தட்டில் விழும் வரை பல வித வேலைகளை செய்பவர்கள் பெண்களே.
தமிழகத்தின் மிகப்பெருமிதம் வாய்ந்த பூம்புகாரின் பெண்கள் ஊரடங்குக்குப் பிறகு இன்று எப்படி இருக்கிறார்கள்?
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியின்கீழ் வரும் வாணகிரி ஊராட்சியை சேர்ந்த மீனவ பெண்களை சந்தித்தேன். வாணகிரியில் மொத்த குடும்பங்கள் 1,400. மீனவ மகளிர் குழுவில் 1,100 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு சுமார் 400 பைபர் படகுகளும், 80 விசைப்படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவப்பெண்கள் பெரும்பாலும் 5-ம் வகுப்பு வரையே படித்துள்ளனர். ஏறத்தாழ 75% மீனவப்பெண்கள் படிப்பறிவின்றி உள்ளனர். முதியோர் கல்வி மூலம் படித்ததில் கையெழுத்திட மட்டும் கற்றுக்கொண்டுள்ளனர்.
வயதற்றவர்கள், அடையாளமற்றவர்கள்:
தங்கள் வயது, பிறந்த தேதி குறித்த முறையான ஆவணங்களோ, நினைவுகளோகூட இப்பெண்களுக்கு இல்லை. வயதைக் கேட்டால் 60-65 இருக்கும் என்கிறார், நாகவள்ளி.
'செந்தமிழ்ச் செல்வி' என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் "பேரு நல்லா இருக்கே" என்று சொன்னால், வெட்கம் வருகிறது அவருக்கு.
"அந்த காலத்துல எங்க மாமா வச்ச பேரு, எல்லாரும் என் பேரு நல்லா இருக்குன்னுதான் சொல்லுவாங்க" என சொல்லிக்கொண்டிருந்த செந்தமிழ்செல்வி, 'ஊரடங்கு' நிலைமை குறித்துக் கேட்டால், சட்டென சோகமாகிவிடுகிறார்.
"6 மாதத்திற்கு முன்பு 126 பெண்களுக்கு வங்கிக்கடன் பெற முயற்சித்தோம். பேன் கார்டு கேட்டார்கள். அது எடுக்க ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருக்க வேண்டும் எனக்கூறினர். இவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் இருப்பதால் ஆதார் அட்டையில் தேதி இல்லை. இவர்களுக்கென சிறப்பு அடையாள அட்டை கூட இல்லை" என்கிறார், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தின் தலைவி ஷர்மிளா சந்திரன்.
மீன், கருவாடு, உடல், உணவு, கரோனா:
"உடம்புல தெம்பு இல்லங்க. இங்க இருந்து கடற்கரைக்கு நடக்குறதுக்கு தெம்பு இல்லை. மழை பேஞ்சா 5,000 நட்டமாகும். வெயில் காஞ்சா 1,000 லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 700 ரூபாய் கிடைச்சா, வண்டி, சுமை தூக்குறவன், கடன்காரன், வட்டிக்காரனுக்கு கொடுத்துட்டு எங்களுக்குக் கடைசியில எதுவுமே மிஞ்சாது. ஊருல வசதியா இருக்கவங்ககிட்ட தான் கடன் வாங்குவோம். இப்போது இத்துடன் கரோனா ஊரடங்கும் சேர்ந்துவிட்டது" என்கிறார், மகேஸ்வரி.
கடல்வாழ் மக்களுக்கு மீன் பிரதான உணவு, ஊரடங்கில் மீன் கிடைக்காமல் இங்குள்ள மக்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையும் தொடர்ச்சியாக மாற்றியுள்ளனர்
"மீன் இருந்தாதான் தொண்டையில சாப்பாடு இறங்கும். காய்கறி குழம்புன்னா தொண்டையில இறங்காது. தூண்டில் போட்டு சிலர் மீன் பிடித்தனர். அவர்கள் எல்லாருக்கும் தர மாட்டாங்க. போலீஸ் எப்போதும் காவலில் இருந்ததால் எங்களால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை" எனக்கூறும் செல்வியின் கையில் மீன் கடித்த சிராய்ப்புகள் ஆழமாகவே பதிந்துள்ளன. செல்வியின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவருக்கு மகனும் கல்லூரிப் படிப்பை முடித்த மகளும் உள்ளனர்.
திருப்தியற்ற உணவுக்கு நடுவே உடல் நசிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. மீன்குடி மக்கள் வாழ்வே, உடல் நசிவை தொழிலின் ஒரு அங்கமாக கருதும் வகையில் தான் இருக்கிறது. தோல் அரிந்த கைகள், அழிந்த நகங்கள், சுமட்டையும் வெப்பச் சூட்டையும் சுமந்து திரிந்த கால்கள், வெயில் பழுப்பில் கறுத்து மரமரத்த உடல் இவைதான் அவர்களின் அடையாளமாக இருக்கிறது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமான உடல் நசிவை எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது கரோனா ஊரடங்கு.
கரோனா காலத்தில் கணவருக்கு விபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கில் கடனாளியாகியிருக்கிறார் நாகவள்ளி. செலவு செய்தும் தனது கணவரை காப்பாற்ற முடியாதது குறித்து நாகவள்ளி சொல்லும்போது அவருக்கு இன்னும் நாதழுதழுக்கிறது.
"என்னுடைய கணவர் ஊரடங்குக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்கு சென்று 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தனர். ஆட்டோவில் ஏறும்போது கம்பி கிழித்துவிட்டது. அத்துடன் நீரிழிவு நோயும் சேர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
எங்களுக்கு 5 மகள்கள். 5 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகள்கள் தான் மருத்துவ செலவுக்கு நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்தனர். எங்க அய்யா (கணவர்) கொடுத்த 70 ஆயிரத்தோட ஊரடங்கின்போது நான் சேமித்து வைத்திருந்த 30 ஆயிரத்தையும் வைத்து வீடு எடுத்துக் கட்ட வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் போய்விட்டார். தண்ணி (மதுப்பழக்கம்) சாப்பிடுவாங்க. அதனாலயே அவர் தொழிலுக்குப் போக மாட்டார். அதுக்கும் மகள்தான் 500-1000 கொடுத்தனுப்பும்.
மருத்துவ செலவுகளுக்கு லட்சக்கணக்கில் செலவழித்தோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. 2 லட்சம் போல கடன் இருக்கு. தம்பி கொடுத்த 2-3 லட்சம் கடன் இருக்கு. அவரு இப்போதைக்குக் கேட்க மாட்டார்.
ஊரடங்கைத் தொடர்ந்து இப்போது வரை மீன்பிடி தொழிலில் கஷ்டம். அதனால், கடன் அடைக்க பெரும் கஷ்டமாக இருக்கிறது. அதவிட பெருங்கவலை எங்க அய்யா என்ன வுட்டு போனதுதான். 3 மாதம் வீட்டில் தான் இருந்தேன். காதில் இருந்த தோட்டை வைத்து வியாபாரம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். 10 ஆயிரத்துக்கு மீன் வாங்கி கருவாடாக்கி விற்றேன். அதில் 5,000 லாபம்" என்கிறார், நாகவள்ளி.
தட்டில் சுவை, கூடையில் நாற்றம்:
"எங்களை பொதுவாகவே பழைய அரசு பேருந்துகளில் தான் ஏற்றுவார்கள். தனியார் பேருந்துகளில் கூட ஏற்றுவார்கள். புதிதாக விடப்பட்டிருக்கும் அரசு பேருந்துகளில் ஒருபோதும் ஏற்றுவதில்லை. நாயை விரட்டுகிற மாதிரி எங்களை விரட்டுவாங்க" என்கிறார், மீன் விற்கும் செந்தில்குமாரி.
கரோனாவுக்குப் பிறகு இந்த நவீன தீண்டாமை அதிகரித்துள்ளது. பேருந்துகளில் ஏற்ற மறுப்பதினாலேயே காலை 9-10 மணிக்கு மீன் விற்கச் செல்லும் பெண்கள், இரவு 10 - 11 மணிக்குதான் திரும்புகிறார்கள்.
"நாங்க 10 பேரை நாடி மீன் விற்பதால் அவர்களுக்கு எங்களால கரோனா வந்துவிடுமாம். கவிச்சி சாப்பிட்டால் கரோனா வந்துவிடுமாம். கரோனா முடிஞ்சாலும் இப்பவும் இப்படித்தான் சொல்லி எங்கள பஸ்ல இருந்து இறக்கி விடுவாங்க. ஊரடங்குல மீன் தான் அதிகம் விரும்பி கேட்டாங்க ஜனங்க. ஆனா, போக்குவரத்து இல்லாததாலதான் பிடித்த மீன்கள கூட எடுத்துட்டுப் போக முடியல. இல்லாட்டி எங்களுக்குக் கொஞ்சம் பொழப்பு நல்லா நடந்திருக்கும்" என்கிறார், செந்தில்குமாரி.
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தொடங்கிய போக்குவரத்து, மீனவப் பெண்களை 'விலக்கிவைத்து' நடந்துள்ளது. இதனால், மயிலாடுதுறை, குத்தாலம், திருவாழி, சீர்காழி ஆகிய இடங்களுக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் பெண்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கின்போது இருமடங்கு கட்டணம் வசூலித்துள்ளனர். பூம்புகாரின் நுழைவுப்பகுதி போல 4 கி.மீ தொலைவில் இருக்கும் தருமகுளத்திற்கு செல்லவே ஒரு மீன்கூடைக்கு 50 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். இந்த செலவுக்கு பயந்தே பல பெண்கள் ஏலம் எடுத்தும் மீன்களை விற்பனை செய்ய வேறு இடங்களுக்குச் செல்லவில்லை.
இன்னொருபுறம், ஊரடங்குக்குப் பிறகு அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும், வாரத்தில் 1-2 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும், அதனை வெளியில் எடுத்துச் சென்று விற்கக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டது. இதனால், தாங்கள் பிடித்த மீன்களை தாங்களே அழிக்கும் நிலைக்கும் மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
"நிலைமை இன்னும் மாறவில்லை. 10 ரூபாய் வாங்கிய ஷேர் ஆட்டோ 20 ரூபாய் ஆகியுள்ளது. 1,000 ரூபாய்க்கு மீன்களை விற்றால் 400-500 ரூபாய் போக்குவரத்துக்கே செலவாகிவிடும்" என்கிறார், 'நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்வியல்' எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற பூம்புகார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சாந்தகுமாரி.
மாறும் ஏல முறை, அதிகமாகும் கூலித் தொழிலாளிகள்:
இப்பகுதியில் உள்ள ஆண்கள் சிலர், கதார், மலேசியா போன்ற நாடுகளில் மீன்பிடி தொழிலாளர்களாகவும், சிங்கப்பூரில் எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களாக பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். மற்றபடி மீன்பிடி தொழிலாளர்களாக மற்றவர்களின் படகுகளில் பணிபுரியும் ஆண்களே அதிகம். ஒரு குடும்பத்தில் ஆண்கள் மீனவர்களாகவோ, மீன்பிடி தொழிலாளர்களாகவோ உள்ள நிலையில், அதே குடும்பத்து பெண்கள், பிடித்து வரும் மீன்களை விற்பவர்களாகவும் உள்ளனர். ஊரடங்கால் ஆண்கள் கடலுக்கு செல்ல இயலாத சூழ்நிலையால், ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்தையும் இழக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அன்றாடம் குடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறை பலமடங்கு உயர்ந்துள்ளது.
"மார்ச்-ஏப்ரல் ஊரடங்கால் மீன்பிடி தொழிலுக்கு யாரும் செல்லவில்லை. அத்துடன், மே-ஜூன் மீன்பிடி தடைக்காலம் வந்துவிட்டது. அதன்பிறகு, 3 மாதங்களாக சரியான மழை. கடந்த 2 மாதங்களாகத்தான் கடலுக்கு ஓரளவு ஒழுங்காக செல்கின்றனர். இப்பதான் நாங்களும் வியாபாரத்த மீண்டும் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி ஆம்பளயாளும் வீட்லதான். நாங்களும் வீட்லதான். ஆனால், இப்போதும் கடல் காத்து அதிகமாக இருக்கிறது. இப்போது கூட 5 நாளாக தொழிலுக்குப் போகவில்லை" என்கிறார், மீன் விற்கும் செந்தில்குமாரி.
ஊரடங்கு சமயத்தில் பிடித்து வரப்படும் மீன்களை விற்பனை செய்யும் மீனவப் பெண்கள் வாங்காததால் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்படியாவது விற்றால் போதும் என 2,000-3,000 ரூபாய் செல்லக்கூடிய ஒரு அன்னக்கூடை அளவு கலப்பு மீன்களை வெறும் 100 ரூபாய்க்கு ஏலம் விட்டிருக்கிறார்கள்.
"மீனவர்களுக்கு என்ன பாதிப்போ அது மீனவப் பெண்களுக்கும் உண்டு. ஏலம் எடுத்த மீன்களை விற்பதற்கென ஒரு ஊரை அந்த பெண்கள் குத்தகை எடுத்து பிடித்திருப்பர். அந்த ஊரில் அவர்கள் மட்டுமே விற்க வேண்டும் என பெண்களுக்குள் பேசி முடிவெடுத்து வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். வேறு யாரும் அங்கு விற்கக்கூடாது. கரோனா ஊரடங்கால் அதில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பொருளாதார விளைவுகளும் அதிகம்" என்கிறார், சாந்தகுமாரி.
மீன் வரத்திலும், ஏலத்திலும், விற்பனையிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கருவாட்டு விற்பனையிலும் எதிரொலிக்கிறது. துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் சுனாமி குடியிருப்பைச் சுற்றிலும் குப்பை கூழங்கள், அதில் மேயும் பன்றிகள் என சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள். இங்கு 2,000 வீடுகள் உள்ளன. 50 டீசல் படகுகள் உள்ளன.
"30 வருஷத்துக்கு மேல கருவாடு வியாபாரம் செய்றோம். ஊரடங்கு அப்ப நாங்க வியாபாரமே செய்யல. மீன் பிடிக்கிற தொழிலுக்குப் போனாதான நாங்க வியாபாரம் பண்ண. 6 மாதமாக கடலுக்கே போகவில்லை. இப்போதுதான் கிடைக்கிற மீன வச்சி கருவாடு போடுறோம். அதுலயும், மழை, புயலுன்னு தொடர்ந்து நஷ்டமா இருக்கு. இப்பவும் தினமும் கடலுக்குப் போறதில்ல" என்கிறார், செந்தமிழ்ச்செல்வி.
"50 வருஷமா கருவாடு வியாபாரம்தான் பாக்குறன். ஊரடங்கின்போது கடன் வாங்கிதான் சாப்பிட்டேன். 1,000-2000-ன்னு வாங்கி இப்போ 1 லட்சம் வரைக்கும் கடன் வந்துருச்சி. அத உழைச்சிக் குடுக்கலாம்னு பாத்தா குடுக்க முடியல. எங்களை வந்து யாரும் எட்டிப்பாக்குறதில்ல. எம்எல்ஏ பவுன்ராஜ், ரோட்டுக்கு வந்துவிட்டு எங்களை வந்து பார்க்க மாட்டார்" என்கிறார், சுனாமிக்கு முன்னதாக கணவரை இழந்த தனபாக்கியம்.
"100 ரூபாயாக இருந்த நெத்திலி கருவாடு இப்போது 200 ரூபாய் ஆகியுள்ளது. நெத்திலி வரத்து இல்லாததால் விலை ஏறியுள்ளது. வரத்து இல்லையென்றால் கிலோ 300 ரூ. கூட கிடைக்கும். ஊரடங்குல கடன் வாங்கியும், நகைகள அடகு வச்சும்தான் சாப்டோம். பாடு (மீன்வரத்து) வந்தாதானே அத மீட்க முடியும். எங்களைக் கண்டாலே மூக்க மூடிக்கொள்வார்கள். பேசினாலும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்" என்கிறார், கருவாட்டை காயப்போட்டுக்கொண்டிருந்த செல்வி.
"மீன் பிடிப்பு குறைவு என்பதால் மீன் வரத்து குறைவு. மீன் வரத்து குறைவு என்பதால் தேவை அதிகமாகி விலை கூடுகிறது. விலை அதிகமாக இருப்பதால், சாமானியப் பெண்களால் அதிகம் ஏலம் எடுக்க முடியாது. விலை அதிகமான மீன்களை மக்களும் வாங்கமாட்டார்கள். இதனால், ஏலம் எடுக்கும் வசதியுள்ளவர்களிடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது" என்கிறார், 'நேஷனல் ஃபிஷ்வர்க்கர்ஸ் ஃபோரம்' அமைப்பின் துணைத்தலைவர் ஆர்.வி.குமரவேலு.
ஒற்றைத் தாய்களும், கடனும் கடன் சார்ந்த வாழ்வும்:
பல்வேறு காரணங்களால் கணவனை இழந்து ஒற்றையாக வாழும் பெண்கள் மீன்குடியில் அதிகம். தடைக்காலத்தின் போது மாநில அரசு மீனவ குடும்பத்திற்கு ரூ.5,000 நிதியுதவி வழங்குகிறது. கணவர் இல்லாத பெண்களுக்கு இத்தொகை கிடைப்பதில்லை.
புஷ்பவள்ளிக்கு 7 மகள்கள். அவருடைய கணவர் இறந்து 9 ஆண்டுகளாகிவிட்டன. ஒரேயொரு மகன். தடைக்காலத்தின் போது மாநில அரசு மீனவ குடும்பத்திற்கு ரூ.5,000 நிதியுதவி வழங்குகிறது. கணவர் இல்லாத புஷ்பவள்ளிக்கு அதுவும் கிடைப்பதில்லை. மகன் மீன்பிடி தொழிலில் உள்ளதால் அவரது பெயரில் விண்ணப்பித்தும் தடைக்கால நிதியுதவி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வேதனைப்படுகிறார் புஷ்பவள்ளி. கணவர் இருக்கும்போதே 4 மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மீதமுள்ள 3 பெண்களுக்கு திருமணம் செய்யும் பொறுப்பு புஷ்பவள்ளிக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கான பொருளாதார சக்தியை குறைத்திருக்கிறது இந்த கரோனா காலம்.
"கொஞ்ச நஞ்ச சேமிப்பைக் கூட கரோனா எடுத்துக்கொண்டுவிட்டது. இப்போது 3 மகள்களுக்கு எப்படி திருமணம் செய்வதென தெரியவில்லை" என்கிறார், புஷ்பவள்ளி.
மீன் விற்கும் செந்தில்குமாரியின் கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். அதற்கு முன்பு மற்றொருவரின் படகில் கூலி வேலையாக கடலுக்கு செய்துகொண்டிருந்தவருக்கு ஒருநாளைக்கு 100-500 ரூபாய் வரை கிடைத்துக்கொண்டிருந்தது. அவரது உடல்நிலை சரியில்லாததால் கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானமும் இல்லாமல் போகவே, செந்தில்குமாரி அப்போதிலிருந்துதான் மீன் வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமாரிக்கு 9, 7 ஆம் வகுப்புகள் படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். தரங்கம்பாடியில் உள்ள பள்ளியொன்றில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மகள்கள், ஊரடங்கால் வீடடைந்ததால் அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் கூடியுள்ளது.
55 வயதான பார்வதியின் கணவர் மாசிலாமணி, மாரடைப்பால் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வைத்தே கரோனா ஊரடங்கை சமாளித்துள்ளார். பார்வதிக்கு 5 மகள்கள். 22 வயதில் ஒரு மகனும் உள்ளார். 2 மகள்களுக்கு கணவர் இருக்கும்போதே திருமணம் செய்துவைத்துள்ளனர்.
"என் கணவர் பெரிய படகு வைத்திருந்தார். சுனாமிக்கு முன்பே இலங்கை கடற்படை அதனை பிடித்துவிட்டது. அதற்கு அரசு கொடுத்த 10 லட்சம் இழப்பீட்டை வைத்து வீட்டை எடுத்துக் கட்டினோம். 3 மகள்களுக்கு நான் தான் திருமணம் செய்து வைத்தேன். கணவர் இருக்கும்போது ஒவ்வொரு மகளுக்கும் 10 பவுன் போடுவோம்.
கடைசி மகளுக்கு 22 வயது. 8 மாதம் முன்பு தான் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே ஊரடங்குக்கு முன்பே திருமணம் பேசிவிட்டோம். மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன் போட்டாச்சு. பொண்ணுக்கு இன்னும் தங்கம் போடவில்லை. இந்த பிள்ளைக்கும் போடுறோம்னு சொல்லித்தான் பேசி முடித்தோம். அதற்குள் கரோனா வந்துவிட்டது. பிச்சாவரம் கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. வெறும் கம்மல், மூக்குத்தி, கொலுசு மட்டும்தான் போட்டேன்.
காசு கேட்ட இடத்திலிருந்தும் வரவில்லை. கல்யாணம் செய்துகொடுக்க முடியாமல் போய்விடுமோ என பயந்தேன். அக்கா ஒரு லட்சம் கடனாக கொடுத்தார். அண்ணன் மகளிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கி கட்டில், பீரோ, வாங்கினோம். கல்யாணத்தில் வந்த 60 ஆயிரம் மொய்ப்பணத்தை வைத்துத்தான் தோடு, கம்மல், பொருட்கள் வாங்கிக்கொடுத்தோம். கொஞ்சம் வெண்கல சாமான் எடுத்தோம். இன்னும் 8 பவுன் போட வேண்டும். போடுறோம்னு வேற சொல்லிட்டன். இன்னும் அவுங்க கேட்கவில்லை. இருந்தாலும் நம்ம நகைய போட்றணும். இல்லையென்றால் நம் மகளுக்குத்தான் கேவலம். மகளுக்கு வளைகாப்பு நடத்த உள்ளேன். அதற்கு 7,000-8,000 சேர்த்து வைத்திருக்கிறேன். பேறுகாலம் பார்த்ததும் நகை எடுத்து போடுகிறேன் என சொல்லியிருக்கிறேன். எவ்வளவு காலம் ஆனாலும் அந்த நகையை போடத்தான் வேண்டும்" என்கிறார், பார்வதி.
"தனித்து விடப்பட்ட பெண்களுக்கு மீன் வியாபாரம்தான் வாழ்வாதாரம். மீனவ குடும்பங்களில் 50 சதவீதத்தினர் பெண்களை நம்பித்தான் குடும்பம் இருக்கும். ஆனால், மீனவப் பெண்களுக்கென சிறப்பு திட்டங்கள் இல்லை. பேரிடர் காலங்களில் செயல்படுத்துவதற்கான பேரிடர் மேலாண்மை இல்லை. குறைந்தபட்ச தொகையைக் கூட எதில் முதலீடு செய்வது என்பது மீனவப்பெண்களுக்குத் தெரியவில்லை. கந்துவட்டியில் சிக்கி பொருளாதார சீரழிவுகளுக்கு ஆளாகின்றனர். இது அவர்களுக்கு இன்னொரு ஊரடங்குதான்" ஆர்.வி.குமரவேலு.
இரட்டிப்பாகி உயர்ந்து நிற்கும் விலைவாசி, அதிகரித்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் வீட்டுச் செலவுக்கு கடன், தொழில் நடத்த கடன், கூடுதலாக பெண்களின் திருமணத்துக்கு கடன், வரதட்சணைக்கு கடன், வளைகாப்பு, பிள்ளைப்பேறு கடன், அடுத்தடுத்த சீர் வரிசைகளுக்கான கடன் என கடனும் கடன் சார்ந்த வாழ்வாகவும் மாறியிருக்கிறது சோழர்களின் பெருமைமிகு நெய்தல் நிலம். இந்தக் கடன்களை கழிப்பதும், அடைப்பதும் மட்டுமே கரோனாவுக்குப் பிறகு மொத்த வாழ்வாகவும் இருக்கப்போகிறது இப்பெண்களுக்கு.
இனி என்ன?
ஊரடங்கு சமயத்தில் தொழில்கள் இயங்காததால் ஐஸ் சரியாக கிடைக்கவில்லை. உப்பு கிடைக்கவில்லை. காய்கறியும் அதிக விலைக்கு அப்போது விற்கப்பட்டது. ரேஷன் அரிசியும், கொஞ்சம் காய்கறிகளுமே அன்றாட உணவு. பன்றித்தொல்லை இங்கு அதிகம் என்பதால், அவை ஏலம் எடுத்த மீன்களை முழுதாக நாசப்படுத்திவிடும். எனவே, மீன்களை பாதுகாத்து விற்க குளிர்ப்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கு ஐஸ் பெட்டி, தராசு, பாய், குடை போன்றவை அடிப்படை தேவைகளாக உள்ளன. மீன்களை விற்கும் இடத்தில் பாதுகாப்பு, கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
"இங்குள்ள மீனவப் பெண்கள் வானகிரி, காரைக்கால் சென்று மீன் ஏலம் எடுப்பார்கள். காரைக்காலுக்கு இங்கிருந்து 35 கி.மீ. டெம்போவில் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது பல சமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு பெண்கள் உயிரிழக்கும் சம்பங்களும் நிகழ்ந்ததுண்டு. வேறு தொழில் கிடையாது. மழைக்காலத்தில் மீனவப் பெண்களுக்கு இழப்பீடாக அவர்கள் செலுத்தும் பணம் 1,500 உடன் மத்திய, மாநில அரசுகளின் பங்காக 3,000 சேர்த்து அக்டோபர் மாதத்தில் 4,500 ரூபாய் வழங்கப்படும். கரோனாவுக்குப் பிறகான சூழலைக் கருத்தில்கொண்டு இந்தத் தொகையை உயர்த்த வேண்டும். மீன் ஏற்றிச் செல்வதற்கான சிறப்பு வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும். குறைந்த வட்டியில் குறைந்தபட்ச கடன் வழங்க வேண்டும். வங்கி அல்லாமல், மீன்வளத்துறையே சொசைட்டி மூலமாக இதனை செய்ய வேண்டும். வங்கி மூலமாக இதனை செய்வது சாத்தியப்படாது" என்கிறார், 'நேஷனல் ஃபிஷ்வர்க்கர்ஸ் ஃபோரம்' அமைப்பின் துணைத்தலைவர் ஆர்.வி.குமரவேலு.
கரோனா தொற்றினால் ஏற்பட்ட பாலினரீதியிலான தாக்கங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கிய ‘மீனா சுவாமிநாதன் ஊடகக் கூட்டாய்வு’க்காக 14-02-2021 அன்று பிரசுரிக்கப்பட்டதன் முழு கட்டுரை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in