

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை கடந்த பிப்ரவரி 5-ம் தேதிக்குப் பின் பிப்ரவரி 8-ம் தேதி வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல, டீசல் விலையும் பிப்.8 வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.90.70 ஆக இருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று (பிப். 14) ரூ.90.96 ஆக அதிகரித்தது. டீசல் விலை ரூ.83.86 பைசாவிலிருந்து ரூ.84.16 ஆக அதிகரித்தது.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (பிப். 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.
இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.