Published : 15 Feb 2021 02:48 PM
Last Updated : 15 Feb 2021 02:48 PM

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது; அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது: ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இணையதளங்களில் குறிப்பாக, ட்விட்டரில் உலவிய 'டூல்கிட்'டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஒரு டூல்கிட், அரசின் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என மிக நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் 'டூல்கிட்' என்பதாகும்.

அந்த 'டூல்கிட்'டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார். இந்த 'டூல்கிட்'டை பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று (பிப். 14) கைது செய்தது. கைது செய்யப்பட்ட திஷா ரவி, போலீஸாரால் நேற்று மாலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

திஷா ரவி கைது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது.

இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x