நீர் ஆதாரங்களை பாதுகாக்கக் கோரி 12,000 கி.மீ. பயணம் செய்த கோவை மாணவர்கள்

நீர் ஆதாரங்களை பாதுகாக்கக் கோரி 12,000 கி.மீ. பயணம் செய்த கோவை மாணவர்கள்
Updated on
1 min read

நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12,000 கி.மீ., இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கோவை மாணவர்கள் 6 பேர் நேற்று கோவை செல்லும் வழியில் சேலம் வந்தனர்.

கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தோனி, அற்புதராஜ், மகாதேவ், சித்தார்த், சையத், அராபத் ஆகியோர் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மூன்று மோட்டார் சைக்கிளில் காஷ்மீர் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் மங்களூர், கோவா, மும்பை, டெல்லி, நகர் சென்று கொல்கத்தா வழியாக 44 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, கோவை செல்லும் வழியில் நேற்று சேலம் வந்தனர். சேலம் வந்த அவர்களுக்கு சக நண்பர்கள் வரவேற்பு அளித்தனர்.

விழிப்புணர்வு பயணத்துக்கு தலைமை வகித்த மாணவர் தோனி கூறியதாவது:

நாட்டில் நீர்நிலைகளை பாது காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எனவே, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டோம்.

சுமார் 12 ஆயிரம் கி.மீ. பயணத்தில் நூற்றுக்கணக்கான ஏரி குளங்களையும் நீர் நிலைகளையும் பார்வையிட்டு, புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளோம். இந்த புகைப்படங்களை பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக கண்காட்சியாக வைக்க உள்ளோம்.

ஏரி, குளங்களில் பொதுமக்கள் குப்பைகள் மற்றும் பாலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை வீசிவதால், மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால், நீர் ஆதாரமும் குடிநீரும் குறைந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை வீசுவதை தவிர்த்து நீர் ஆதராரங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

இவர்கள் இன்று கோவையில் தங்கள் பயணத்தை முடிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in